புதுச்சேரி: புதுச்சேரி துய்மா வீதியில் உள்ள பெண் அமைச்சர் சந்திரபிரியங்காவின் வீட்டுக்கு பொருட்களை எடுக்க வந்த கணவரிடம் சாவியை கொடுக்க பணியாளர்கள் மறுத்துவிட்டனர். புதுச்சேரி போக்குவரத்துதுறை அமைச்சர் சந்திரபிரியங்கா (34). இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்த புகாரால் அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கடந்த வாரம் ஆளுநர் தமிழிசையை முதல்வர் ரங்கசாமி சந்தித்து பரிந்துரை கடிதம் வழங்கினார். இந்த தகவலை அறிந்த சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநர் மற்றும் முதல்வருக்கு கடிதம் அனுப்பினார்.
ஆனால், சந்திரபிரியங்கா சமீபகாலமாக அவரது துறை சார்ந்த பணியில் சரியாக செயல்படாததால்தான் முதல்வர் ரங்கசாமி கடிதம் கொடுத்ததாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் சந்திர பிரியங்கா டிஸ்மிஸ் செய்யப்பட்டாரா? ராஜினாமா செய்தாரா? என்று அரசு சார்பில் இதுவரை தெளிவுப்படுத்தவில்லை. அரசாணையும் வெளியிடவில்லை. அவர் தொடர்ந்து அமைச்சருக்கான அரசு பங்களாவில்தான் உள்ளார். போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சந்திரபிரியங்கா அமைச்சராக தொடர்கிறாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சர் சந்திர பிரியங்கா அவரது கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், சந்திர பிரியங்காவுடன் சேர்ந்து வாழ்ந்தபோது புதுச்சேரி துய்மா வீதியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட வீட்டில் வைத்திருந்த தனது பொருட்களை எடுத்துச் செல்ல சண்முகம் நேற்று காலை அங்கு வந்துள்ளார். அங்கு கிழக்கு எஸ்பி சுவாதிசிங் மேற்பார்வையில் பெரியகடை போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். உள்ளே செல்ல முயன்ற சண்முகத்தை அவர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களை மீறி சென்ற சண்முகம், அங்கிருந்த பணியாளரிடம் வீட்டு சாவியை கேட்டபோது, சந்திரபிரியங்கா அனுமதியில்லாமல் வீட்டின் சாவியை கொடுக்க முடியாது எனக்கூறி திருப்பி அனுப்பினர். இதனால் ஏமாற்றத்துடன் சண்முகம் திரும்பினார். இதையடுத்து பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்ட போலீசாரும் சிறிது நேரத்தில் புறப்பட்டு சென்றனர். ஆண், பெண் என 2 போலீசார் மட்டும் தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
* நடனமாடி கொண்டாட்டம்
சந்திரபிரியங்காவை பிரிந்து வாழும் அவரது கணவரான காரைக்காலை சேர்ந்த சண்முகம், மனைவியின் அமைச்சர் பதவி பறிப்பு செய்தியை பார்த்து திரைப்பட பாணியில் சாலையோர டீக்கடையில் தேநீர் அருந்தி நடனம் ஆடி கொண்டாடி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.