புதுச்சேரி: பெஞ்சல் புயலால் புதுச்சேரியில் நேற்று சூறைக் காற்றுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததோடு போக்குவரத்து சேவையும் குறைந்ததால் வீடுகளில் பொதுமக்கள் முடங்கினர். புயல் பாதிப்புகளை முதல்வர் ரங்கசாமி, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவ்வப்போது ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினர். வங்கக்கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயலால் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் பலத்த சூறைகாற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
கடலில் ராட்ச அலை எழும்புவதால் புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் சுற்றுலாதலங்கள் முழுவதுமாக மூடப்பட்டன. குறிப்பாக பாண்டி மெரீனா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, நல்லவாடு, மூர்த்திக்குப்பம் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மக்கள் அனுமதிக்கப்படவில்லை. காவல்துறை தடுப்புகளை வைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பினர்.
தரைக்காற்று 70 கிமீ. இருந்து 90கிமீ வேகத்தில் வீசியதால், கடல் அலையானது 5 அடி முதல் 6 அடி வரை அதிகரிப்பதால் மீனவ கிராமங்களில் மழைநீர் புகுந்தது. புயல் நெருங்க நெருங்க காற்றின் வேகமும் கடல் சீற்றமும் அதிகரிக்கும் என்பதால் கடற்கரை சாலை மற்றும் சுற்றுலாத்தலங்கள் முழுமையாக மூடப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பலத்த மழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளான ஜவஹர் நகர், ரெயின்போ நகர், வம்பாகீரப்பாளையம், லம்போர்ட் சரவணன் நகர் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான வீடுகளில் மழைநீர் புகுந்தது.
கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேங்காய்திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகளை கூடுதலாக கயிறு போட்டு மீனவர்கள் கட்டியுள்ளனர். அங்கு 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. நகரம், கிராமப்புறங்களில் பலத்த மழையால் வீடுகளுக்குள் பொதுமக்கள் முடங்கினர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதுச்சேரி பஸ் நிலையம், ரயில் நிலையம் மட்டுமின்றி முக்கிய கடைவீதிகள், வணிக சாலைகள் வெறிச்சோடின.
சென்னை மாமல்லபுரம் வழியாக இசிஆர் வழித்தடத்தில் சென்னை செல்லும் புதுச்சேரி அரசு பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. பெரும்பாலான தனியார் பேருந்துகளும் புயல் எச்சரிக்கையால் சேவையை குறைத்தன. பெட்ரோல் பங்குகள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. நகரம், கிராமப்புறங்களில் நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்கள் மூலம் உணவு பொட்டலங்கள் ஆங்காங்கே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இதனிடையில் புதுச்சேரியில் பெஞ்சல் புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மற்றும் சட்டம்- ஒழுங்கு சீனியர் எஸ்.பி. கலைவாணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். கடற்கரை சாலை லே கஃபே உணவகத்திற்கு சென்ற முதல்வர் ரங்கசாமி, கடலின் சீற்றத்தை பார்வையிட்டார். பின்னர் புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் குலோத்துங்கனிடம் கேட்டறிந்தார்.
பின்னர் முதல்வர் ரங்கசாமி கூறுகையில், ‘ புயலானது புதுச்சேரியை ஒட்டிய தமிழக பகுதியான மரக்காணத்தை தாண்டிச் செல்லும் என்று தற்போதைக்கு தகவல் வந்துள்ளது. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 121 இடங்களில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அவசியமுள்ள இடங்களில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. வருவாய்த்துறையினர் அனைவரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கனசெட்டிகுளம், பிள்ளைச்சாவடி, காலாப்பட்டு பகுதிகளில் கடல் அரிப்பு வழக்கமாக இருந்து வருகிறது. அதை தடுக்க கடற்கரையோரம் ஏற்கனவே கற்கள் கொட்டி வருகிறோம்’ என்றார். இதேபோல் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரக்கோணம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
* கடலூரில் கடும் கடல் சீற்றம்
பெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மேகம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. காலை 11 மணிக்கு மேல் லேசான மழை பெய்ய துவங்கி, தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழையாக பெய்ய தொடங்கியது. கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்பட்டது. வழக்கமான அளவைவிட நேற்று அதிக அளவில் உயரமாக, சீற்றத்துடன் அலைகள் எழுந்தது.
இதனால் அந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் பொதுமக்கள் அந்த பகுதியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 25 பேர் கொண்ட பேரிடர் மீட்பு படையினர் அனைத்து மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். கடலூரில் உள்ள திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் நேற்று ரத்து செய்யப்பட்டன.
* மரக்காணத்தில் அமைச்சர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், வானூர் தாலுகாவில் உள்ள 19 மீனவ கிராமங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் நகரில் நேற்று காலை 9 மணி முதல் மிக கனமழை பலத்த காற்றுடன் பெய்ததால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது.ஆங்காங்கே மரங்களும் சாய்ந்தன. மரக்காணம் பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.
பலத்த காற்று வீசுவதன் காரணமாக இசிஆர் சாலை உள்ளிட்ட பல இடங்களில் பல மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசியதால், மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தனர். இதனால் முக்கிய சாலைகளில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதுபோல் இசிஆர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அந்த சாலையும் வெறிச்சோடி காணப்பட்டது.
புயல் மரக்காணம் அருகே கரையை கடக்க கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மரக்காணம் பகுதியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு ஆய்வு செய்து மீனவர் கிராம பாதுகாப்பு மையங்களில் தங்கியிருக்கும் பொதுமக்களை சந்தித்து பேசினார். பாதுகாப்பாக தங்கியிருக்கும் பொதுமக்களுக்கு அனைத்து ஏற்பாடுகள் செய்ய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.