புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூரில் அதிகவேகமாக வந்த கார் மின்கம்மம் மீது மோதியதில் தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சமீபகாலமாக புதுச்சேரியில் மதுபோதையில் வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையிலேயே வில்லியனூரை சேர்ந்த 6 பேர் ஒரே காரில் மதுபோதையில் பழுதாவூர் சாலையில் காரை ஓட்டிச் செல்லும் போது காரானது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு அருகில் இருந்த மின் கம்மம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரானது தீ பிடித்து எரிந்தது. இச்சம்பவத்தை கண்ட அருகில் இருந்தவர்கள் காரில் இருந்தவர்களை உடனடியாக மீட்டுள்ளனர்.
இருப்பினும் காரில் பயணித்த பாலசந்தர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ள 5 பேர் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தானது விடியற்காலையில் நிகழ்ந்ததால் பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. காரில் பயணித்தவர்கள் மதுபோதையில் இருந்ததாலேயே விபத்து நேரிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.