ரெட்டிச்சாவடி: சென்னையில் இருந்து வேதாரண்யம் சென்ற அரசு பஸ் தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்தார். கண்டக்டர் உள்பட 49 பேர் படுகாயமடைந்தனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வேதாரண்யத்துக்கு அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சென்றது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த ராஜா (44) டிரைவராகவும், நாகப்பட்டினம் கிருஷ்ணமூர்த்தி (41) கண்டக்டராகவும் பணியில் இருந்தனர்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் புதுச்சேரி-கடலூர் சாலையில் ரெட்டிச்சாவடி அடுத்த கரிக்கன் நகர் மலாட்டாறு பாலம் அருகே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்சுக்கு அடியில் சிக்கி டிரைவர் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்த திருவாரூர் லெனின் (45), சென்னை சுந்தரி (53), மணிகண்டன் (41), பசுபதி (41), வசந்த் (23), முருகன் (44), மாறன் (80), ராம் (30), கண்டக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்பட 49 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து ரெட்டிச்சாவடி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கிரேன் உதவியுடன் பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து காரணமாக புதுச்சேரி-கடலூர் சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.