புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 2021 முதல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. என்.ஆர் காங்கிரஸ்- பாஜ கூட்டணி ஆட்சியில் முதல்வராக ரங்கசாமி இருந்து வருகிறார். தொடர்ந்து பாஜ அரசு நிர்வாக ரீதியாக தனக்கு தொல்லை கொடுப்பதாக அவ்வப்போது ரங்கசாமி குற்றம் சாட்டினார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் பாஜ சார்பில் போட்டியிட்ட உள்துறை அமைச்சரும், முதல்வர் ரங்கசாமியின் மருமகனுமான நமச்சிவாயம் தோல்வி அடைந்தார்.
இதனால் முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைச்சரவையில் இருந்து பாஜ வெளியேற போவதாக சில நாட்களுக்கு முன் தகவல் கசிந்தது. இந்த சூழலில், பிரதமராக மோடி மூன்றாவது முறையாக நேற்று பதவியேற்றார். இந்த விழாவுக்கு அழைப்பு விடுத்தும் ரங்கசாமி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். பாஜவுடன் மோதல் போக்கு மற்றும் தேர்தல் தோல்வியால் முதல்வர் ரங்கசாமி அதிருப்தியில் உள்ளார்.
இந்த கூட்டணி தொடர்ந்தால், 2026 சட்டமன்ற தேர்தல் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முதல்வர் ரங்கசாமி கருதுகிறார். இதனால், கூட்டணியில் இருந்து வெளியேற முதல்வர் ரங்கசாமி முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜவுடன் நிச்சயமாக கூட்டணி இருக்காது என்றே என்.ஆர் காங்கிரசார் கூறுகின்றனர். மோடி பதவி ஏற்பு விழாவை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.