புதுச்சேரி: புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் விதிகளை மீறி விதவிதமான பேனர்கள் வைத்துள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. அமைச்சர் நமச்சிவாயம் தமது பிறந்தநாள் விழாவை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி அவரது ஆதரவாளர்கள் விதிகளை மீறி சாலைகள், காவல் நிலையங்கள், பள்ளிகள், கடை மற்றும் வணிக நிறுவனங்களை மறைத்து பேனர்கள், கட்டவுட்கள் வைத்துள்ளனர்.
உயர்நீதிமன்றத்தின் பேனர் தடை சட்டத்தை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைத்திருக்கும் பேனர், விபத்தை ஏற்படுத்தும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். பேனர் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் புதுச்சேரி அரசு மீது தலைமை நீதிபதி தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.