புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய சட்டசபை கட்டும் கோப்புக்கு துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சபாநாயகர் செல்வம், சட்டசபையில் உள்ள தனது அறையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் புதிய தலைமை செயலகத்துடன் கூடிய சட்டசபை வளாகம் கட்டுவதற்கான கோப்புக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்துள்ளார்.
புதிய சட்டப்பேரவை வளாகமானது ரூ.576 கோடியில், தட்டஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் தலைமைச் செயலகத்தின் கூடிய ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் அமைப்பதற்கான கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கும்.
மாநில அந்தஸ்துக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டப்பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் முதல்வர் ரங்கசாமி பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து நேரில் வலியுறுத்த உள்ளார். இந்த ஆண்டிலேயே மாநில அந்தஸ்துக்கான வழிவகைகள் ஆராயப்படும். இவ்வாறு கூறினார்.
* நிழல் முதல்வரா?
‘முதல்வர் அறிவிக்க வேண்டியதையெல்லாம் தன்னிச்சையாக சபாநாயகர் அறிவிக்கிறார். நீங்கள் நிழல் முதல்வராக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறதே’ என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த சபாநாயகர் செல்வம், ‘அரசின் திட்டங்களை நான் தன்னிச்சையாக அறிவிக்கவில்லை. முதல்வர் அறிவித்ததைத்தான் நான் மீண்டும் தெரிவிக்கிறேன்.
முதல்வர் தன்னை சுயவிளம்பரம் செய்து கொள்ள மாட்டார். அதே நேரத்தில் அரசின் நடவடிக்கைகள், திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு தெரியவேண்டும். அதன் அடிப்படையில் தகவலை தெரிவிக்கிறேன். முதல்வரை மீறி திட்டங்களை அறிவிப்பதாக மற்றவர்கள் கருதினால், அதற்கு நான் பொறுப்பாக முடியாது’ என்றார்.
சபாநாயகர் செல்வம் பாஜவை சேர்ந்தவர். புதுச்சேரியில் பாஜ-என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளார். இருப்பினும் அவரால் தனித்து செயல்பட முடியவில்லை என்று அவ்வப்போது தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.