புதுச்சேரி: புதுச்சேரியில் யோகா திருவிழா வருகிற ஜூன் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக புதுச்சேரி மாநிலம் முழுவதும், அரசு சார்பில் யோகா விழா குறித்து பதாகைகள் மற்றும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த பதாகைகளில் அனைத்து அறிவிப்புகளும் இந்தியில் மட்டும் அச்சடிக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் தமிழ் முழுமையாக புறக்கணிப்பட்டிருப்பதும், புதுச்சேரி மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி கடற்கரை சாலையில் காந்தி சிலை எதிரே யோகா விழாவுக்காக இந்தி மொழியில் வைக்கப்பட்டுள்ள அரசு பதாகைகளை தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று கிழித்து ஏறிந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியகடை போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதேபோல், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அந்ேதாணியார் கோயில், காமராஜர் சிலை அருகே, நெல்லித்தோப்பு, அஜந்தா சிக்னல் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை கருப்பு மை பூசி அழித்து, எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ் பதாகைகள் வைக்காததற்கு யார் பொறுப்பு? என்பது குறித்து முதல்வர் ரங்கசாமி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.