சென்னை: குடியரசு துணை தலைவர் ஜெகதீஷ் தன்கர், புதுச்சேரி மாநிலத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்வதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, நேற்று மதியம் சென்னை பழைய விமான நிலையம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவரை, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மெய்யநாதன், மேயர் பிரியா மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
குடியரசுத் துணை தலைவர் வரவேற்பை ஏற்று, உடனடியாக சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, தனி ஹெலிகாப்டரில் புதுச்சேரி மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றார். குடியரசு துணைத் தலைவர் 3 நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு, 17ம் தேதி தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். இங்கு வழி அனுப்பு விழா நடக்கிறது. அதன்பின்பு பிற்பகல் 2.25 மணிக்கு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், சென்னையில் இருந்து, தனி விமானத்தில் புறப்பட்டு, டெல்லி செல்கிறார்.