சென்னை: புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மித்சிங்கிற்கு எதிரான ஊழல் புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐ-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கியதாக கூறி போலி ரசீதுகளை தயாரித்த மனித வள மேம்பாட்டு மையத்தின் இயக்குநராக இருக்க கூடிய பேராசிரியர் ஹரிஹரன் மீது புகார் எழுந்தது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக துணைவேந்தர் குர்மித்சிங்-கிடம் ரூ.50 லட்சம் லஞ்சமாக கொடுத்ததாக குற்றம் சாட்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடபட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கதின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆனந்த் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஊழல் தடுப்பு சட்டத்தில் கொண்டுவரபட்ட புதிய திருத்தங்களின் படி வழக்கு தொடர அனுமதி கோரி மத்திய கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியதாகவும், புதுச்சேரி பல்கலைகழகம் கடிதம் அனுப்ப மறுத்து கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கபட்டது.
சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையை ஆராய்ந்த நீதிபதி, மனுதாரர் குற்றசாட்டில் ஆதாரங்கள் உள்ளன. புகாருக்கான முகாந்திரம் உள்ளது. எனவே பொய்யாக அளிக்கபடும் ஊழல் புகாரில் இருந்து அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரபட்ட சட்டதிருத்தத்தை, ஊழல் செய்யும் அதிகாரிகளை காப்பாற்ற துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்க முடியாது என கூறி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.