புதுச்சேரி: புதுச்சேரியில் காமாட்சியம்மன் கோயில் நிலம் அபகரிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த அரசு உயர் அதிகாரி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான 64,000 சதுர அடி நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனி புலனாய்வு குழு அமைத்து வழக்குப்பதிவு செய்தது. போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்ததாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலி ஆவணத்தை பதிவு செய்த வில்லியனூர் சார் பதிவாளர் சிவசாமியும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் போலி பாத்திரம் பதிவு செய்த போது பத்திரப்பதிவு துறை இயக்குனராக இருந்த தற்போதைய நில அளவுத்துறை இயக்குனர் ரமேஷ் புதுச்சேரி பதிவாளராக பதவி வகித்து தற்போது மீன் வளத்துறை இயக்குனராக பாலாஜி இருவரும் மோசடி வழக்கில் சேர்க்கப்பட்டனர். மேலும், அவர்கள் இருவரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த இருவரையும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சென்னையில் பதுங்கி இருந்த பாலாஜியை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து சென்றனர்.