*26 பேர் படுகாயம்
*ஆரணி அருகே சோகம்
ஆரணி : புதுச்சேரி அம்மன் கோயிலுக்கு சென்றபோது, ஆரணி அருகே மினிவேன் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் 8 மாத ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது. மேலும், 26 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரிசத்திரம், துந்தரிகம்பட்டு, சக்தி நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிலர் ஒவ்வொரு மாதமும் புதுச்சேரி மாநிலம், மொரட்டாண்டி பகுதியில் உள்ள பிரத்தியங்கரா தேவி கோயிலுக்கு செல்வது வழக்கம்.
அதன்படி, 25க்கும் மேற்பட்ட பக்தர்கள் குடும்பத்துடன் நேற்று மதியம் 1.30 மணி அளவில் ஆரணியில் இருந்து புதுச்சேரிக்கு மினிவேனில் புறப்பட்டு சென்றனர். அருணகிரிசத்திரம் பகுதியை சேர்ந்த டிரைவர் முரளி(45) என்பவர் மினிவேனை ஓட்டிச்சென்றார்.தொடர்ந்து, விண்ணமங்கலம் அருகே உள்ள ஆரணி- சேத்துப்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மினிவேனின் பின்பக்க டயர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், எஸ்ஐ அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, விபத்தில் படுகாயமடைந்த 27 பேரை மீட்டு 3 ஆம்புலன்ஸ்களில் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், விபத்தில் சிக்கியவர்கள் அருணகிரிசத்திரம், துந்தரிகம்பட்டு, சக்தி நகர், அண்ணா நகர், கல்லேரிப்பட்டு, புங்கம்பாடி, களம்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த சாந்தி(53), மகேஸ்வரி(66), நவீன்(6), சுமதி(45), சத்யா(35), குமாரி(54), கார்த்திகா(8), சாந்தி(56), பேபி(45), சங்கீதா(32), ஜெயபாரதி(30), நரேந்திரன்(10), லட்சுமி(50), சாந்தி(60), பிரசன்னா(10), பாபு(31), சத்யா(45), சாந்தி(51), சித்ரா(60), அமுதவள்ளி(24), தமிழ்ச்செல்வி (20), ஆசிகா(7), முரளி(49) உள்ளிட்டவர்கள் என்பது தெரியவந்தது.
இவர்களில் ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளி நடராஜன் என்பவரது 8 மாத ஆண் குழந்தை ஹேமேஸ்வரன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தது. மேலும், சிறுவன் நவீன்(6) மற்றும் 2 பெண்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலுக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் குழந்தை பலியானது, 26 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.