புதுக்கோட்டை: தமிழ்நாட்டிலேயே 2வதாக புதுக்கோட்டையில் கட்டப்பட்ட அரசு பல் மருத்துவ கல்லூரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். தமிழகத்தில் சென்னையில் மட்டும் அரசு பல் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம் அண்ணாமலையார் பல்கலை கழக வளாகத்தில் இயங்கி வந்த பல் மருத்துவ கல்லூரியை அரசு கையகப்படுத்தியது.
இந்நிலையில் தென் மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், எம்எல்ஏ டாக்டர் வை.முத்துராஜா மற்றும் அனைத்து தரப்பினரும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தினர். அவரும், கல்லூரி துவங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி பல் மருத்துவ கல்லூரி கட்ட கடந்த 28.10.2021 அன்று ரூ.63 கோடியே 41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்தன. இந்த பணிகள் நிறைவடைந்தன.
இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் புதுக்கோட்டை பல் மருத்துவமனை கட்டிடத்ைத திறந்து வைத்தார். இதையொட்டி புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பல் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு, மருத்துவ கல்லூரி வளாகத்தில் வகுப்புகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.