புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலை ரூ.50 முதல் ரூ.325 வரை உயர்த்தப்படுவதாக மாநில கலால்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஏராளமான மதுவகைகள் தரமானதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து மதுப்பிரியர்கள் அதிக அளவில் புதுவைக்கு வந்து மது பானத்தை விரும்பி அருந்துகின்றனர். இதனால் புதுவை அரசின் வருவாயில் மது விற்பனை முக்கிய இடம் பிடித்துள்ளது.
புதுச்சேரியில் கூடுதல் கலால் வரி விதிக்கப்பட்டதை அடுத்து, மதுபானங்கள் மீதான விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து வகை மதுவகைகளுக்கும் ஒரு லிட்டர் ரூ.50 முதல் ரூ.325 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பீர் வகைகள் ரூ.33 முதல் ரூ.42 வரையும், ஓயின் உள்ளிட்ட மதுபானங்கள் ரூ.50 முதல் 145 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விலை உயர்வானது உடனடியாக அமல்படுத்தப்படும் என கலால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதால், இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி கலால்துறை தெரிவித்துள்ளது. இதேபோல, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் மதுபானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. தற்போது, இந்த ஆண்டு மதுபான விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபானங்களின் வகைகளும் விலை உயரும் என தெரிகிறது. இதில், அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்றாலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளது.