புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பேரவை தலைவர் செல்வம் பாஜக உறுப்பினர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். புதுவை சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை 2024-25ம் ஆண்டிற்கான கூட்டத்தொடா் துணைநிலை ஆளுநா் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது.
துணைநிலை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் கடந்த வியாழக்கிழமை ஆக.1ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்.ரங்கசாமி கடந்த வெள்ளிக்கிழமை ஆக.2ம் தேதி காலை 9 மணி முதல் 156 பக்கங்கள் கொண்ட புதுச்சேரி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதத்தில், புதுவை மாநில அந்தஸ்துக்கு ஆளும் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் உறுப்பினர் வைத்தியநாதன் பேசியிருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர்களுக்கு ஆதரவாக சபாநாயகர் செயல்படுவதாக அவர் கூறினார். இதனால் பேரவை தலைவர் செல்வம் பாஜக உறுப்பினர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.