* அரசியல் தலையீட்டால் போலீசார் கப்-சிப்
* சுற்றுலா பயணிகளை குறிவைத்து அபராதம்
புதுச்சேரி : புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், வாகன ஓட்டிகள் சிக்னல்களில் விதிகளை துணிச்சலாக மீறி வருவது தொடர்கதையாகி வருகிறது. உள்ளூர் மக்களுக்கு அரசியல்வாதிகளின் தலையீடு அதிகரிப்பதால் போலீசார் கப்-சிப் மனநிலைக்கு வந்துள்ளதோடு சுற்றுலா பயணிகளை குறிவைத்து அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சு கலாச்சாரத்துடன் இணைந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுலா தளத்தில் சிறந்து விளங்குவதால் தினமும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவதால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இதனால் வார விடுமுறை நாட்களில் உள்ளூர் மக்களே வெளியே செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த போக்குவரத்துதுறை போலீசார் பல்வேறு யுத்திகளை கடைபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் போக்குவரத்து பாதிப்பு குறைந்தபாடில்லை.
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு புதுச்சேரியின் போக்குவரத்து விதிகள் பற்றி எதுவும் தெரியாது. இதனால் அவர்கள் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனை பயன்படுத்தி போக்குவரத்து போலீசாரும் அவர்களை துரத்தி, துரத்தி பிடித்து அபராதங்களை விதித்து கல்லா கட்டி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க உள்ளூர் மக்கள் சிக்னலில் நிற்கும் போது ஃபிரீ லெப்ட் வழியை அடைத்துக்கொண்டு நிற்பதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. ஒரு சிக்னலில் வாகனங்கள் செல்லும்போது மற்ற சிக்னல்களில் நிற்கும் வாகனங்கள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் போக்குவரத்துக்கு இடையூறாக முன்னேறி நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்திராகாந்தி சிக்னலில் வில்லியனூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சிக்னலில் நிற்காமல் இடதுபுறம் ஃபிரீ லெப்ட் வழியாக சென்று மீண்டும் வலது புறமாக திரும்பி போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களில் செல்கின்றனர். இதனால் சிக்னலில் நின்று செல்லும் வாகனங்கள் மீது இவர்களின் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. இதுபோன்று புதுவையில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் தங்களது வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
போக்குவரத்து போலீசார் உள்ளூர் மக்கள் மீது அபராதங்களை விதித்தால் உடனே முதல்வர், அமைச்சர், எம்எல்ஏ அல்லது அரசியல் பிரமுகர்கள் தலையிட்டு போக்குவரத்து போலீசாரை மிரட்டுகின்றனர். இதற்கு பயந்து போய் போக்குவரத்து போலீசார் இதனை கண்டும் காணாமல் கப்-சிப் நிலையில் இருந்து வருகின்றனர். அரசியல்வாதிகளின் தலையீட்டால் போக்குவரத்து போலீசார் சுதந்திரமாக செயல்படமுடியாத நிலை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகையால் தான் காவலர்கள் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை மடக்கி ஆங்காங்கே அபராதங்களை விதித்து உயர் அதிகாரிகளுக்கு கணக்கு காட்டி வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 33 இடங்களில் புதிய சிக்னல்கள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. இன்னும் பல்வேறு இடங்களில் இந்த சிக்னல்கள் சோதனை ஓட்டத்துடன் உள்ளது. மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. மேலும், ராஜிவ்காந்தி, இந்திராகந்தி உள்ளிட்ட முக்கிய சிக்னல்களை நவீன தொழில்நுட்பத்துடன் சீரமைக்க விரைவில் டெண்டர் விடப்படவுள்ளது.
சிக்னல்களில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிந்து தானாக வழக்கு பதிவு செய்வது, எல்லைக்கோட்டை தாண்டி நிற்கும் வாகனங்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து எச்சரிக்கை செய்வது, அதிவேகமாக செல்லும் வாகனங்கள், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கைபடுத்துவது உள்ளிட்ட நவீன கருவிகள் பொருத்தப்படவுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க 180 இடங்களில் 425 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது.
போக்குவரத்து போலீசாரின் இந்த நவீன தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் மட்டுமே புதுவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும். மேலும் அதுவரையில் போக்குவரத்து போலீசார் சிக்னல் பகுதியில் மட்டும் நிற்காமல் அனைத்து சிக்னலின் அனைத்து சாலை பகுதிகளிலும் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
விரைவில் புதிய சிஸ்டம்
புதுச்சேரியில் ரூ.99 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் வருவாய்துறை இணைந்து, ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையம் ஒன்றை இசிஆர் சாலையில் உருவாக்கி வருகிறது. இதன்மூலம் சிக்னல்களில் சிவுப்பு விளக்கு 3 முதல் 4 நிமிடங்கள் வரை எரியும் வகையில் இருக்கும். சாலையில் வாகனங்கள் குறைவாக இருந்தால் காத்திருக்கும் காலம் 1 நிமிடமாக குறையும். வாகனங்கள் அதிகமாக இருந்தால் தானாகவே நேரத்தை நீட்டித்துக் கொள்ளும் திறன் கொண்டது. புதுவையில் 22 சிக்னல்களில் இந்த சிஸ்டம் விரைவில் கொண்டு வரப்படவுள்ளது.


