புதுச்சேரி : தட்டாஞ்சாவடியில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 3 மணிநேர மின் தடையால் அதிகாரிகள் இருட்டு அறையில் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.புதுச்சேரி, தட்டாஞ்சாவடியில் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்களை பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே இங்கு வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழக பகுதிகளில் இருந்து 630 மாணவ-மாணவிகள், இளைஞர்கள் பங்கேற்றனர்.
முகாமில் மொத்தம் 7 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலையாட்களை தேர்வு செய்தனர். அங்கு பணியில் சேர்வதற்காக ஆர்வமுடன் காலையிலேயே இளைஞர்கள், இளம்பெண்கள் திரண்டிருந்தனர். அவர்கள் முகாம் நடைபெறும் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டு ஒவ்வொருவராக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வு நேற்று நடந்தது.
அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. வேலைவாய்ப்பு அலுவலகம் முழுவதும் இருளில் மூழ்கிய நிலையில் வழக்கம்போல் சிறிது நேரத்தில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின்விநியோகம் வரும் என்று அனைவரும் காத்திருந்தனர். ஆனால் ஜெனரேட்டர் பழுது மட்டுமின்றி அங்கிருந்த சில இன்வெட்டர்களும் இயங்காத நிலையில் ஒட்டுமொத்தமாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்ற பகுதியே இருளில் மூழ்கியது.
இதனால் இருட்டு அறையில் நின்றபடி வேலைவாய்ப்பு முகாமில் மாணவ-மாணவிகள் பங்கேற்கும் அவலம் ஏற்பட்டது. அதிகாரிகள் செல்போன் டார்ச் மற்றும் டேபிள் லைட் வெளிச்சத்தில் முகாமில் பங்கேற்றவர்களிடம் விவரத்தை கேட்டறிந்து, சான்றிதழ்களை சரிபார்த்து நேர்முக தேர்வு நடத்தினர். 3 மணி நேர மின்தடையால் முகாமில் பங்கேற்ற இளைஞர், இளம்பெண்கள் மிகுந்த அவதியடைந்தனர். தொடர்ந்து மாலை வரை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இறுதியாக இம்முகாமில் பங்கேற்றவர்களில் 233 பேருக்கு வேலைவாய்ப்புக்கான பணியாணை வழங்கப்பட்டது.