புதுச்சேரி: புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சியினர் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். புதுச்சேரி மாநிலத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் ஏற்கனவே போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. ஆனால் மாநில அரசு எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, தற்போது இண்டியா கூட்டணியில் உள்ள, தி.மு.க., காங்கிரஸ், கம்யூ., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஒருங்கிணைந்து தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக செல்வதாகவும் அங்கு முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தார்கள். இதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் தடுப்பை மீறி முன்னேறி செல்ல போராட்டக்காரர்கள் முயல்வதால் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் மிகவும் பதற்றமான சூழல் நிலவியது.