புதுச்சேரி: புதுச்சேரியில் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.500 குறைத்து மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, சிவப்பு அட்டைதாரர்களுக்கு ஒன்றிய அரசின் 200 ரூபாய் மானிய குறைப்பும் சேர்த்து புதுச்சேரி அரசு கூடுதலாக 300 ரூபாய் மானியம் வழங்குகிறது. இதனால் சிவப்பு அட்டைதாரர்களுக்கு சிலிண்டரின் விலை ரூ.500 குறைக்கப்படுகிறது அதைப்போல, மஞ்சள் வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசின் 200 ரூபாய் மானியத்தை சேர்த்து, புதுச்சேரி அரசு கூடுதலாக 150 ரூபாய் மானியம் வழங்குகிறது. இதனால் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு மொத்தமாக சிலிண்டருக்கு ரூ.350 குறைக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயுவின் விலை ரூ.200 குறைக்கப்படும் என்கிற ஒன்றிய அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மக்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் அதற்கு ஒரு உதாரணம் ஆகும்.”
“உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏற்கனவே 9.1 கோடி சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. ஏழைப் பெண்களுக்கு கூடுதலாக 75 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளுக்கு ஒன்றிய அமைச்சரவை இப்போது ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகள் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் கொடுக்கப்பட்டு வருகிறது.”
“அவர்களுக்கு இன்று முதல் மேலும் 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் ஓணம் மற்றும் ரக்ஷா பந்தன் தினத்தில் மகளிருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பரிசாக இந்த விலைக் குறைப்பு உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மாநில அரசின் சார்பில் ஏற்கனவே சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.300ம், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு ரூ.150ம் சமையல் எரிவாயு மானியம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.”
“இந்த நிலையில், ஒன்றிய அரசு ரூ.200 மானியம் அளித்திருப்பது, புதுச்சேரி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்துவாக உள்ளது. ஒன்றிய அரசின் இந்த விலை குறைப்பை உளமார வரவேற்கிறேன். புதுச்சேரி யூனியன் பிரதேச குடிமக்கள் சார்பாக பிரதமர் அவர்களுக்கு எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.