புதுச்சேரி: புதுச்சேரி தவளக்குப்பம் அருகே பூராணங்குப்பம், புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் ஒட்டக சவாரி நடந்து வருகிறது. அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான 2 ஒட்டகங்களை மத்திய பிரதேச மாநிலம் பார்வானியைச் சேர்ந்த ரமேஷ் குல்மி (67), பத்வானியைச் சேர்ந்த அஜய் (19) ஆகியோர் பராமரித்து வருகின்றனர். கடந்த 15ம்தேதி ரமேஷ் குல்மி குடிபோதையில் இருந்ததால் ஒட்டக சவாரிக்கு வரவேண்டாம் என கூறி அஜய் மட்டும் ஒரு ஒட்டகத்துடன் கடற்கரைக்கு வந்து சுற்றுலா பயணிகளை சவாரி ஏற்றினார்.
ஆனால் ரமேஷ் குல்மி அங்கு வந்து ஒட்டகத்தில் ஏறி சென்றுள்ளார். திடீரேன தவறி விழுந்தவரை ஒட்டகம் மிதித்து கடித்து குதறியதாக தெரிகிறது. பலத்த காயமடைந்தவரை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் எற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனிடையே ரமேசை ஒட்டகம் தாக்கும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.