புதுச்சேரி: புதுச்சேரி பாஜ கூட்டணி அரசில் ₹28 கோடி முறைகேடு நடந்து உள்ளதாகவும், ஏழு பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் மூலதனம் ₹461 கோடி அழிக்கப்பட்டுள்ளதாகவும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை நேற்று முன்தினம் கூடியது. அப்போது இந்திய தணிக்கை துறை சார்பில் 2022ம் ஆண்டு மார்ச் முடிய புதுச்சேரி அரசின் நிதிநிலை தணிக்கை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் புதுச்சேரி அரசின் நிதி நிலைமை, சொந்த வருவாய், மூலதனம், கடன்கள், பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு, அரசின் பணம் கையாடல், இந்திய அரசின் மானிய உதவிகள் குறித்து விரிவாக அலசப்பட்டுள்ளது.
அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:
2021-2022ம் காலக்கட்டங்களில் புதுச்சேரி அரசின் வருவாய் கடந்த ஆண்டைவிட ₹1,969 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2020-2021ம் ஆண்டை காட்டிலும் 6.63 சதவீதம் அதிகமாகும். ஒன்றிய அரசிடமிருந்து திட்டம் சாரா மானியங்கள், திட்டப்பணிகளுக்கான மானியங்கள், மத்திய அரசின் திட்டங்களுக்கான மானியங்களை விடுவிக்கிறது. 2021-2022ம் ஆண்டு காலக்கட்டத்தில் விடுவிக்கப்பட்ட மானியங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ₹43 கோடி(1.73%) குறைந்துள்ளது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய் இலக்காக ₹4134 கோடி இலக்கு வைக்கப்பட்டதில், ₹2056 கோடிதான் நிதி திரட்ட முடிந்தது. உள்ளாட்சி அமைப்புகள், மற்றும் இதர அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி ₹779 கோடியில் இருந்து 511.55 கோடியாக குறைந்துள்ளது.
எனினும் இந்த அமைப்புகள் தனது சொந்த வளங்களை கொண்டு தற்சார்பு முயற்சிகளை மேற்கொள்வதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பாசிக், பாப்ஸ்கோ உள்ளிட்ட 12 பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 359 கூட்டுறவு நிறுவனங்களில் ₹1,045.54 கோடியை அரசு முதலீடு செய்திருந்தது. இதில் ஐந்து பொதுத்துறை நிறுவனங்கள் ₹38.48 கோடி லாபத்தையும், ஏழு பொதுத்துறை நிறுவனங்கள் ₹49.87 கோடி நஷ்டத்தையும் அடைந்தது.
இதில் ஏழு நிறுவனங்களின் நிகர மதிப்பு ₹461.60 கோடி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. பெரும் நஷ்டத்தை சந்திக்கும் அரசு நிறுவனங்கள் கூட்டுறவு அமைப்புகளின் செயல்பாடுகளை அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
₹712.44 கோடி செலவு செய்யப்படவில்லை. முறைகேடு இழப்பு, களவு தொடர்பான துறை வாரியாக கணக்குகளை சரி பார்த்தபோது 322 நேர்வுகளில் ₹27.98 கோடி பண கையாடல்கள் செய்யப்பட்டுள்ளதாக அரசு துறைகள் தெரிவித்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.