* கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் உருவாக்கம்
* சென்னையை தலைமையிடமாக கொண்டு அமைக்க அரசு உத்தரவு
சென்னை: பொதுப்பணித்துறையால் கட்டப்படும் அரசு கட்டிடங்களின் உறுதி தன்மை மற்றும் தரத்தினை பரிசோதனை செய்யும் வகையில் கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் சென்னை தலைமை இடமாகக் கொண்டு தர கட்டுப்பாட்டு கோட்டத்தை உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித்துறையை, பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை என்று இரண்டாக பிரித்து அரசால் ஆணையிடப்பட்டது. நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் 3 தரக்கட்டுப்பாட்டு கோட்ட அலுவலகங்கள் முறையே விழுப்புரம், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகியவற்றை பணிப்பெயர்ச்சியின் அடிப்படையில் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் பொதுப்பணித்துறைக்கு மாற்றம் செய்தும் ஆணையிடப்பட்டது.
அதன்படி பொதுப்பணித்துறையில் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய 3 தரக்கப்பட்டுப்பாட்டு கோட்ட அலுவலகங்கள் மற்றும் அவற்றின் உபகோட்ட அலுவலகங்கள் ஆகியவற்றிலுள்ள 194 தற்காலிகப் பணியிடங்களுக்கு ஒப்பளிப்பு செய்து, அவற்றின் நிர்வாகக் கட்டுப்பாடுகளை முதன்மை தலைமை பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர், பொதுப்பணித்துறை சென்னை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதற்கு ஆணையிடப்பட்டது. அனைத்து அரசு துறைகளுக்கும் தேவையான கட்டடங்கள், சிறப்புக் கட்டமைப்புகள் கட்டுதல் மற்றும் அவற்றின் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கும் சேவைகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது.
பொதுப்பணித்துறை கட்டுமான பொருட்களின் தொழில்நுட்பத்திலும், கட்டுமான செயல்முறைகளிலும், புதுமையினைப் புகுத்தி நிலையான மேம்பாட்டிற்கு வழிவகுக்கத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. கட்டடங்களின் தரத்தை சீராக்கும் வண்ணம், மையப்படுத்தப்பட்ட தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் வாயிலாக 4 தரக்கட்டுப்பாட்டு கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.திட்டங்களை செயல்படுத்தும் போது ஒப்பந்தத்தில் உள்ள தர விதிகளை பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக 4 தரக்கட்டுப்பாட்டு கோட்ட அலுவலகத்தை சார்ந்த பொறியாளர்கள் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துப் பணிகளில் பல்வேறு நிலைகளிலும் கட்டுமான பணிகள் மற்றும் கட்டுமான பொருட்களின் தரத்தை உறுதி செய்ய இந்த தரக்கட்டுப்பாட்டு அலகு சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. பணித்தளத்தில் உள்ள பொருட்கள் மற்றும் வேலைத் திறனானது அந்த பணிகளுக்கென நிர்ணயிக்கப்பட்ட தேவைகள் மற்றும் தரத்துடன் இருப்பதை உறுதி செய்வதே தரக்கப்பட்டுப்பாட்டு அலகின் முக்கிய குறிக்கோளாகும்.
பொதுப்பணித்துறையால் கட்டப்படும் அரசு கட்டிடங்களின் உறுதி தன்மை மற்றும் தரத்தினை பரிசோதனை செய்யும் வகையில் கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் சென்னை தலைமை இடமாகக் கொண்டு தர கட்டுப்பாட்டு கோட்டத்தை உருவாக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.