சென்னை: பொதுத் துறை நிறுவனங்களை தணிக்கை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் வெளியிட்டுள்ள அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என ஜனாதிபதிக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சு.வெங்கடேசன் எம்பி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அண்மையில் சி.ஏ.ஜி வெளியிட்டுள்ள ஒரு டெண்டர் அதிர்ச்சி அளிக்கிறது. அது பொதுத்துறை, உள்ளாட்சித் துறைத் தணிக்கையை செய்வதற்கு சி.ஏ நிறுவனங்களை விண்ணப்பிக்குமாறு கோரியுள்ளது. கணக்கு தணிக்கை ஊழியர்களுடன் சேர்ந்து இந்த சி.ஏ நிறுவனங்கள் தணிக்கை செய்வார்களாம். இந்தியாவின் உயர்ந்த தணிக்கை அதிகாரியான சி.ஏ.ஜி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டவர்.
நாடாளுமன்றத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். அவரது பணி அரசுடைமையான பொதுத்துறை, தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள், உள்ளாட்சி நிறுவனங்களை தணிக்கை செய்வது. சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் (சி.ஏ) செய்யும் தணிக்கையும், சி.ஏ.ஜியின் தணிக்கையும் ஒன்றல்ல. இந்த நிறுவனங்களைத் தணிக்கை செய்வதில் சி.ஏ.ஜி துறை அதிகாரிகளின் தனித்திறன் நிபுணத்துவமுடையது. அதேபோல் உள்ளாட்சி தணிக்கையும் சிஏஜியின் தணிக்கை வரம்புக்கு உட்பட்டதேயாகும். சுருக்கமாக சிஏஜி என்பவரும், அவரது கணக்கு தணிக்கைத் துறையும், இந்திய மக்களின் நிதியின் பாதுகாவலர்கள் என்றால் மிகையாகாது.
இந்நிலையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் புரளும் இந்த தணிக்கையை தனியார் சி.ஏ நிறுவனங்கள் மேற்கொள்ள அழைப்பது என்பது சிஏஜியிடம் அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள கடமையை மீறுவதாகும். மேலும் இந்த நிறுவனங்களிடம் இருக்கும் ரகசியமான விவரங்களும் தனியார் கைகளுக்குப் போய்ச் சேரும் ஆபத்தும் உண்டு. சி.ஏ.ஜி எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் பணிபுரிய வேண்டும் என்பதால்தான் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டம் அவரை தனி உரிமையுடன் வைத்தது.
அந்த அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு மாறாக சிஏஜியே தனியாரை துணைக்கு அழைப்பது ஆபத்தானது. எனவே சி.ஏ.ஜி உடனடியாக இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும். இந்த துறையின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களது நிதியைக் காப்பாற்ற முடியும். எனவே தனியார் சி.ஏ நிறுவனங்களை அழைத்து வெளியிட்டிருக்கும் அறிவிக்கையை சி.ஏ.ஜி உடனடியாக திரும்பப் பெற அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.