சென்னை: பொது வினியோக திட்டத்திற்காக 6 கோடி பாக்கெட் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஒரு லிட்டர் அளவிலான 6 கோடி பாக்கெட் பாமாயில் கொள்முதல் செய்வதற்காக நவம்பர் 8ம் தேதி இ-டெண்டர் என்று சொல்லக்கூடிய மின்னணு டெண்டர் பொது விநியோகத்தில் கோரப்பட்டது. இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும், தடை செய்ய வேண்டும் என்று கூறி மதுரையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
மனுவில், ஒளிவு மறைவற்ற டெண்டர் சட்ட விதிகளின்படி 2 கோடி ரூபாய் வரை மதிப்பிலான டெண்டர்களுக்கு விண்ணப்பிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். 2 கோடி ரூபாய்க்கு மேலான டெண்டர்களுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். ஆனால் ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள பாமாயில் டெண்டர் கோரி விண்ணப்பிக்க 30 நாளுக்கு பதில் 15 நாள் மட்டுமே அவகாசம் தந்தது டெண்டர் சட்ட விதிக்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளுக்காக குறுகிய கால டெண்டர் கோரப்பட்டுள்ளது; அதற்கு சட்ட விதிகள் அனுமதி வழங்கின்றன என்று விளக்கம் அளித்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அவசர தேவைகளுக்காக குறுகிய கால டெண்டர் கோர விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகளின் ஒப்புதலை பெற்று தான் டெண்டர் கோரப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் எந்த தகுதியும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதேபோல், 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் டெண்டரை எதிர்த்த வழக்கும் இதே காரணங்களை கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.