போபால்: மத்தியப்பிரதேசத்தில் சாதி கணக்கெடுப்பு, ரூ.25லட்சம் மருத்துவ காப்பீடு உள்பட காங்கிரஸ் கட்சியின் 59 தேர்தல் வாக்குறுதிகள் நேற்று வெளியிடப்பட்டது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் 230 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகள் நேற்று வெளியிடப்பட்டது. கட்சியின் மாநில தலைவர் கமல்நாத் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 106 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில்,விவசாயிகள், பெண்கள், அரசு ஊழியர்கள், அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் உறுதியளிக்கும் வகையில் மொத்தம் 59 தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது. தொடர்ந்து பேசிய மாநில தலைவர் கமல்நாத், ‘‘மாநிலத்தில் மகிழ்ச்சியை கொண்டுவருவதற்கு மகிழ்ச்சி இயக்கம் தொடங்கப்படும். காங்கிரஸ் வரும் மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரும் என்பதே கட்சியின் புதிய முழக்கமாகும்” என்றார்.
ம.பி.க்கு தனி ஐபிஎல் கிரிக்கெட் அணி
* சாதிவாரி கணக்கெடுப்பு
* அனைத்து மக்களுக்கும் ரூ.25லட்சத்துக்கான மருத்துவ காப்பீடு
* ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி
* பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 உதவித்தொகை
* ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள்
* பழைய ஓய்வூதிய திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2000 ஓய்வூதியம்
* மத்தியப்பிரதேசத்துக்கென தனி ஐபிஎல் கிரிக்கெட் அணி
* 100 யூனிட் இலவச மின்சாரம்
* விவசாயிகளின் மின்சார நிலுவை கட்டணம் தள்ளுபடி
* ஓபிசிக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு
* 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதத்துக்கு ரூ.500 உதவித்தொகை, 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1000 மற்றும் 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1500 உதவித்தொகை.