புதுடெல்லி: ஒன்றிய சிவில் சர்வீஸ் ஓய்வூதிய திருத்த விதிகள் 2021ல் ஒன்றிய பணியாளர் அமைச்சகம் முக்கிய மாற்றம் செய்துள்ளது. இதுதொடர்பாக கடந்த 22ம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய விதியில், ‘‘பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றும் எந்தவொரு ஊழியரும் அடுத்தடுத்த தவறான நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்டாலோ, பணியிலிருந்து விடுவிக்கப்பட்டாலோ அவர்களுக்கான ஓய்வூதிய பலன்களை இழக்க நேரிடும். இருப்பினும் இது குறித்து சம்மந்தப்பட்ட அமைச்சகத்தால் மறுஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கப்படும்’’ என கூறப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய விதியில் இதுபோன்ற ஓய்வூதிய பலன்கள் ரத்து செய்யப்படும் எந்த அம்சங்களும் இல்லை. எதிர்கால நன்னடத்தை, கருணை உதவித் தொகை போன்றவற்றுக்கு உட்பட்டு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை தொடர்வது அல்லது வழங்குவது தொடர்பான விதிகள் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் பொருந்தும் என புதிய விதிகள் கூறுகின்றன. இந்த விதிகள் 2003 டிசம்பர் 31 அன்று அல்லது அதற்கு முன் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பொருந்தும். ரயில்வே பணியாளர்கள், சாதாரண, தினசரி வேலைவாய்ப்புள்ள ஊழியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளுக்கு இந்த விதிகள் பொருந்தாது.