சென்னை: பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை ஏப்ரல் 28க்குள் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் உத்தரவை அமல்படுத்திய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 19 மாவட்டங்களில், கொடிக்கம்பங்கள் 100 % அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் 31 சதவீதம் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன என்று கூறப்பட்டிருந்தது.
தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் கோபிநாத் வாதிடும்போது, பொது இடங்களில் அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு வாடகை வசூலித்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், மற்ற இடங்களில் கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நான்கு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார். அதற்கு நீதிபதி, சென்னையில் 31 சதவீதம் மட்டுமே கொடி கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது ஏன். சென்னையில் உயர் நீதிமன்ற உத்தரவை 100 சதவீதம் அமல்படுத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறது. சாலை நடுவில் உள்ள தடுப்புகளில் கொடிக்கம்பங்கள் நடுவதற்கு அரசு ஏன் அனுமதி அளிக்கிறது.
இது அபாயகரமானது. மனித உயிர்களுக்கு உரிய மதிப்பு அளிக்க மாட்டீர்களா, தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று உத்தரவை அமல்படுத்துவதற்கு ஜூலை 24ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொது இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாத மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் என்று நீதிபதி தெரிவித்தார்.