சென்னை: காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் பூவை ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று பின்னர் இரவு பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தனுஷின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார், பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்தனர்.
இந்த நிலையில், தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் என்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கோரி ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிபதி, மனுதாரர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். மேலும், இந்த வழக்கில் தொடர்புள்ள கூடுதல் டிஜிபி ெஜயராமை கைது செய்யவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து கூடுதல் டிஜிபி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை விசாரிக்குமாறு வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டது. அதன்படி, இந்த மனு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தபடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் பூவை மூர்த்தியின் முன்ஜாமீன் மனு நேற்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், கடத்தல் சம்பவத்திற்கும் ஜெகன்மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் இந்த வழக்கில் உள் நோக்கத்துடன் காவல்துறை அவரை சேர்த்துள்ளது. சிபிசிஐடி விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
சிபிசிஐடி காவல்துறை தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆகியோர் ஆஜராகி வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்தனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதிடும்போது, ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜெகன் மூர்த்தியை சந்தித்த சிசிடிவி புகைப்பட காட்சிகளை தாக்கல் செய்தார். தொடர்த்து அவர் வாதிடும்போது, விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை ஆரம்ப கட்ட நிலையில் உள்ளதால முன் ஜாமீன் வழங்க கூடாது.
ஒட்டு மொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது ஜெகன் மூர்த்தி தான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜெகன் மூர்த்திக்கும் ஏடிஜிபி ஜெயராமனுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. போலீஸ் வாகனம் வழங்கியதை ஏடிஜிபி தனது வாக்குமூலத்தில் மறுக்கவில்லை என்று வாதிட்டார். அப்போது நீதிபதி, கடத்தப்பட்டதாக கூறப்படும் சிறுவன் 3 மணி நேரத்தில் ஏன் மீண்டும் விடுவிக்கப்பட்டார் என்று விசாரணை செய்யப்பட்டதா? என்று கேட்டார்.
அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், சிறுவன் கடத்தப்பட்டதும் சிறுவனின் தாய் 100க்கு புகார் அளித்தார். அதனால், காவல்துறை சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. வேறு எங்கும் கொண்டு செல்ல முடியாததால், காவல்துறை வாகனத்தில் சிறுவனை விட்டு சென்றுள்ளனர். எனவே, முன் ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இந்த வழக்கில் நேற்று மாலை தீர்ப்பளித்தார். அதில், பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.
மனுதாரர் குற்றச்சாட்டப்பட்டவர்கள் மற்றும் காவல்துறை ஏடிஜிபி ஆகியோரிடம் பேசிய ஆடியோ பதிவுகள், கைப்பற்றப்பட்ட பணம், மகேஸ்வரியின் வாக்குமூலம், குற்ற செயலுக்காக காவல்துறை வாகனத்தை பயன்படுத்தியது ஆகியவை தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் மூலம் மனுதாரருக்கு இந்த கடத்தல் வழக்கில் தொடர்புள்ளதற்கான முகாந்திரன் உள்ளது தெரியவந்துள்ளது. எனவே, மனுதாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.