சென்னை: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருந்து, 2024-25ம் கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பில் 937 மாணவர்களும், பதினொன்றாம் வகுப்பில் 827 மாணவர்களும் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 722 மாணவர்களும் பொதுத்தேர்வு எழுதியுள்ளனர். இவர்களில் பலர் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும், அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை என்ற அய்யன் வள்ளுவரின் குறளுக்கேற்ப இந்த மாணவர்களின் மேற்படிப்பிற்கு உதவிடும் வகையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுள் 9 மாணவர்களுக்கு தலா ரூ.50,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் வள்ளலார் உடனிருந்தனர்.