மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், தெருக்களில் கண்ட இடங்களில் குப்பை போடாமல் இருக்க, பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு ஒலி பெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பேரூராட்சியின் இந்த புது வகையான நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாமல்லபுரம் முழுவதும் பல்வேறு தெருக்களில் பேரூராட்சி நிர்வாகமும் மூலம் குப்பைகளை போடுவதற்கு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இங்கு, வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு குப்பைகளை கண்ட இடங்களில் கண் மூடித்தனமாக போடக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ஆனால், அவர்கள் கண்டு கொள்ளாமல் தெருக்களின் ஓரம் குப்பைகளை வீசி விட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றிணைந்து மாமல்லபுரம் முக்கிய வீதிகளில் சுற்றுலாப் பயணிகள் – உள்ளூர் மக்கள் குப்பைகளை போடாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு வருகிறது. இது சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘மாமல்லபுரம் பேரூராட்சி முழுவதும் குப்பைகளை கண் மூடித்தனமாக போடக்கூடாது என தினமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இருப்பினும், உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளிலும் தெருக்களின் ஓரம் வீசி விட்டு செல்வதை காணமுடிகிறது. இதனை தடுக்க ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்து, ஒலி பெருக்கி பொருத்தப்பட்டு வருகிறது. இந்த ஒலிபெருக்கிகள் மூலம் குப்பைகள் கண்ட இடங்களில் போடுவது தவிர்க்கப்படும் என நம்புகிறோம்’ என்றனர்.