சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணியின் ஒரு பகுதியாக, ரயில் நிலையங்களில் பொது முகவரி அமைப்பு, சிசிடிவி, தொலைபேசி உள்ளிட்ட தொலைதொடர்பு பணிக்கு ரூ.99 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு முதல், சென்னை விமான நிலையம் – விம்கோ நகர், பரங்கிமலை – சென்னை சென்ட்ரல் ஆகிய இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னைவாசிகள் இடையே நாளுக்குநாள் மெட்ரோ ரயில் சேவை வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் தொடங்கின. தற்போது, நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு மெட்ரோ பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
அதாவது, இரண்டாம் கட்ட திட்டம் 3 வழித்தடத்தில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்த மெட்ரோ ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், மெட்ரோ வழித்தடம் அமைப்பது மட்டுமின்றி, தொலைதொடர்பு உள்ளிட்ட இதர பணிகளை மேற்கொள்ளவும் மெட்ரோ ரயில் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் இடையேயான 4வது வழித்தடத்தில் மொத்தம் 27 ரயில் நிலையங்களும், ஒரு பணிமனையும் அமைய இருக்கிறது. அதில், ஒளிபரப்பப்படும் தகவல் காட்சிகள், பொது முகவரி அமைப்பு, சிசிடிவி கண்காணிப்பு, அணுகல் கட்டுப்பாடு மற்றும் தொலைபேசி போன்ற தொலைத்தொடர்பு வசதிகள் உள்ளிட்டவற்றுக்கான ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ரூ.99 கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த அந்த நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. சென்னை மெட்ேரா ரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவன தலைவர் ராகவேந்திரன் முரளி ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4வது வழித்தடத்தில் இருக்கும் பூந்தமல்லி – போரூர் இடையே தான் முதலாவதாக சேவை தொடங்கும் என கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தான் தொலைத்தொடர்பு பணிகளுக்கான ஒப்பந்தம் தற்போதே வழங்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4வது வழித்தடத்தில் இருக்கும் பூந்தமல்லி – போரூர் இடையே தான் முதலாவதாக சேவை தொடங்கும் என கூறப்படுகிறது.