திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே, வனவிலங்குகள் நடமாட்டத்தால், செண்பகத்தோப்பு வனப்பகுதிக்கு அனுமதின்றி பொதுமக்கள் செல்லக்கூடாது போலீசார் தடை விதித்துள்ளனர். இது குறித்து எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் செண்பகத்தோப்பு வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் மான், மிளாமான், காட்டுமாடுகள், யானைகள், நரி உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்கினங்கள் உள்ளன. அரிய வகை பறவைகளும் உள்ளன. கடந்த சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மலை பெய்து வருகிறது.
இதனால், நீரோடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இந்நிலையில், செண்பகத் தோப்பு வனப்பகுதியில் கடந்த 15 நாட்களாக யானைக் கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால், மம்சாபுரம் காவல்நிலையம் சார்பில் வனப்பகுதியில் ஒரு எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘தொடர்ச்சியான மழையால் நீரோடகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டமும் உள்ளது. அனுமதியின்றி பொதுமக்கள் வனப்பகுதிக்கு செல்லக் கூடாது என தெரிவித்துள்ளனர். இதேபோல, உரிய அனுமதி இல்லாமல் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினரும் எச்சரித்துள்ளனர்.