*விவசாயிகள் வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி : பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
பேட்டப்பனூர் கால்நடை மருத்துவமனையில், மருத்துவர்கள் பற்றாக்குறையால், கால்நடைகளுக்கு சிகிச்சையளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, கால்நடை மருத்துவர்களை நியமிக்க வேண்டும். வேப்பனஹள்ளியில் உள்ள வேளாண்மை அலுவலகம் கட்டிடம் சேதமாகி உள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து நெல், ராகி மூட்டைகள் நனைந்து வீணாகிறது.
எனவே, வேளாண்மை அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும். பாரூர் ஏரியின் கீழ் பொதுப்பணித்துறை சொந்தமான இடங்களை தனியார் சிலர் ஆக்கிரமித்து, அவ்வழியே பொதுமக்கள் சென்று வர இடையுறு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றி, தூர்வார வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுவரையில் எந்த ஏரியும் அளவீடு செய்து அதற்கான அறிக்கை அளிக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. நீர்நிலைகள், நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில், ஒரே நேரத்தில் அதிகளவில் காய்கறிகள் விளைவிக்கப்படுவதால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வும், பயிற்சியும் அளிக்க வேண்டும்.
போச்சம்பள்ளி வாரச்சந்தையில், கூடுதல் சுங்க கட்டணம் வசூலிப்பதை தடுக்க தகவல் பலகை வைக்க வேண்டும். துவரை, தக்காளி சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், மாங்காய்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தவும், பாதிப்புகளை கண்டறியும் சீசன் தொடங்குவதற்கு முன்பே உரிய பயிற்சிகளும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
இதுகுறித்து தொடர்புடைய அலுவலர்கள் பதிலளித்து பேசுகையில், ‘இ-நாம் திட்டத்தின் கீழ் வேளாண் விற்பனை கூடங்களில் மாங்காய்கள் விற்பனை செய்யலாம். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்ற தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்கறிகள் சாகுபடி தொடர்பாக, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் கட்டண விவரங்களுடன் தகவல் பலகை வைக்கப்படும்,’ என்றனர். இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.