Saturday, June 21, 2025
Home செய்திகள்Banner News பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு

by Lavanya

சென்னை: பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம் என தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 1970-80-களில் நடைபெற்ற வெண்மைப் புரட்சிக்கு முன்பாகவே 1958 ஆம் ஆண்டே தமிழ்நாட்டில் பால் உற்பத்தியினை ஒருங்கிணைக்கும் நோக்கில், பால் வளத்துறை தொடங்கப்பட்டு 1965 ஆம் ஆண்டு கூட்டுறவுத் துறையிலிருந்து நிர்வாகம் மற்றும் சட்டரீதியான அதிகாரங்கள் பால்வளத் துறைக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பிலிருந்து 1972 ஆம் ஆண்டில் நிறுவனங்கள் சட்டத்துறையின் கீழ் (Companies Act) வணிக நடவடிக்கைகளை மேலாண்மை செய்யும் நோக்கில் தமிழ்நாடு பால் உற்பத்தி வளர்ச்சிக் கழகம் (TNDDC) உற்பத்திக் கழகம் உருவாக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களின் காரணமாக பால் உற்பத்தி வளர்ச்சிக் கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதியப்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்திற்கு மாற்றப்பட்டது. உலகளவில் அதிக அளவிலான பால் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக திகழும் வேளையில், நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில், தமிழ்நாடு 4.57 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. தமிழ்நாடு பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாடுத்துறையின் கட்டுப்பாட்டில் தற்போது கிராம அளவில் மொத்தம் 10,814 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இவற்றில் செயல்பாட்டில் உள்ள 9,189 சங்கங்களில் 1,856 சங்கங்கள் மகளிர் சங்கங்களாகச் செயல்படுகின்றன.பால் வளத்துறையின் முதன்மையாக நோக்கமே கிராம அளவில் ஏழை எளியோரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட கால்நடை வளர்ப்பினை ஊக்குவித்தல், அதன் மூலம் பால் உற்பத்தியினைப் பெருக்குதல்.

தன்னிறைவைப் பெறும் உயரிய நோக்கில் பல்வேறு திட்டங்கள் திறம்படச் செயல்படுத்துதல் ஆகும். குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக மக்களின் மனதில் பதிந்திருக்கும் ஆவின் நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தரமான பால் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பால் அட்டைகள் மூலம் குறைந்த விலையில் பால் விநியோகமானது சீரான முறையிலும் நேர்த்தியான முறையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளில் முக்கிய பங்கு வகிப்பது பால் பயன்பாடு ஆகும். இதனை கருத்தில் கொண்ட முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் நாளில் கையொப்பமிட்ட 7 அறிவிப்புகளில் ஆவின் பால் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 3 ஆண்டுகளில் பால் வளத்துறையினை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பால் கொள்முதல் மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்துதல். நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆவின் பாலை குளிரூட்டும் வகையில் சேமிப்புக் கிடங்குகளை அமைத்தல், நுகர்வோரின் தேவையறிந்து அதற்கேற்ப ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் ஆவின் நெய், ஐஸ்கீரிம், யோகார்ட், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ், டெய்ரி ஓய்ட்னர். 40 நாட்கள் வரையில் கெட்டுக் போகாமல் இருக்கும் பதப்படுத்தப்பட்ட பால். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உலகத்தரம் வாய்ந்த ஆவின் பால் பவுடர் உற்பத்தியை அதிகரித்தல், பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை அவ்வப்போது உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பால் கொள்முதல் மற்றும் விநியோகம்

தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் 9,189 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு சுமார் 3.85 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கி வருகின்றனர். இதன் மூலம் தற்போது நாளொன்றுக்குச் 35.67 இலட்சம் லிட்டர் பால் சங்க அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 4 இலட்சம் லிட்டர் பால் உள்ளூர் தேவைக்காக சங்கங்கள் மூலம் விற்பனை செய்தது போக. 31.67 இலட்சம் லிட்டர் பால் 27 மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்த 22.7.2021 அன்று ஆவின் நிறுவனம் 43.05 இலட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது.மேலும், பால் கொள்முதலை அதிகரிக்கும் பொருட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பசும்பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு 32 ரூபாயிலிருந்து 35 ஆகவும், எருமைப் பாலின் விலை லிட்டருக்கு 41 ரூபாயிலிருந்து 44 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 18.12.2023 முதல் கொள்முதல் செய்யப்படும் பசும்பால் மற்றும் எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. 18.12.2023 முதல் ஏப்ரல் 2024 வரையான காலத்திற்கு 108.30 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாகப் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் அனைத்து உறுப்பினர்களும் பயனடைந்து வருகின்றனர்,

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள்

இந்திய அளவில் பால் உற்பத்தியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் தமிழ்நாடு அரசின் பால் வளத்துறையின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

ரூபாய் 21.75 கோடிச் செலவில் 2000 லிட்டர் கொள்ளவு கொண்ட 4 எண்ணிக்கையிலான மொத்த பால் குளிர்விப்பு நிலையங்களும் மற்றும் 5000 லிட்டர் கொள்ளவு கொண்ட 143 எண்ணிக்கையிலான மொத்த பால் குளிர்விப்பு நிலையங்களும் நிறுப்பட்டுள்ளன.

ரூபாய் 18.76 கோடி செலவில் 866 தானியங்கி பால் சேகரிப்பு அலகுகளும், 350 எண்ணிக்கையிலான செயலாக்க தரவு பால் சேகரிப்பு அலகுகளும், 1074 எண்ணிக்கையிலான நிறுவப்பட்டுள்ளன. பால் பகுப்பாய்வு கருவிகளும் நிறுவப்பட்டுள்ளன.

ஈரோடு ஒன்றியத்தில் உள்ள கால்நடை தீவன தயாரிப்புத் திறன் நாள் ஒன்றுக்கு 150 மெட்ரிக் டன் என்ற அளவிலிருந்து நாள் ஒன்றுக்கு 300 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் புதிதாக நாள் ஒன்றுக்கு 12 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட தாது உப்பு கலவை தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.

ரூ.2 கோடி செலவில் மாதவரம் பயிற்சி நிலையம் மற்றும் வேலூர், விழுப்புரம் மாவட்ட ஒன்றிய பயிற்சி நிலையங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தப்பட்டது.

அச்சரப்பாக்கம் (காஞ்சிபுரம்- திருவள்ளூர்), கடலூர், தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் கரூர் ஆகிய ஒன்றியங்களில் பால் பண்ணைகள் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நாமக்கல் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 2 இலட்சம் லிட்டர் கையாளும் திறன் கொண்ட பால் பதப்படுத்தும் பண்ணை நிறுவும் பணிகள் 89 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 50 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் வழங்கப் பணிகள் தொடங்கப்பெற்று நடைபெற்று வருகின்றன.

ஆவின் பால் பொருள்கள் விற்பனையை அதிகரித்திட ஏதுவாக புதிதாக 342 பாலகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

நுகர்வோர்களுக்கு ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் பொருட்டு சேலத்தில் நாளொன்றுக்கு 6000 லிட்டர் உற்பத்தி திறன் உள்ள புதிய ஐஸ் கிரீம் தொழிற்சாலை திறக்கப்பட்டது.

மாதவரம் பால் பண்ணையில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் மத்திய தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் துவங்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஏற்கனவே உள்ள பால் பண்ணையின் பால் கையாளும் திறனை 7 லட்சம் லிட்டராக விரிவாக்கம் செய்யவும் மற்றும் 30 மெட்ரிக் டன் பால் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கவும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 50,000 லிட்டர் பால் கையாளும் திறனுடைய புதிய பால் பண்ணை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

பெருகிவரும் மக்கள் தேவையினைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 14.11.2023 அன்று, மூலப்பொருள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட கால்நடை தீவனத்தினைச் சேமித்து வைப்பதற்காக ரூ.214 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தின் செலவில் 1500 மெட்ரிக் டன் கூடுதலாக சேமிப்புக் கிடங்கு கட்டடம்.

திருநெல்வேலி மாவட்ட ஒன்றியத்தில் மகளிர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மகளிருக்கு எனத் தனியே நூலக வசதியுடன், விடுதி மற்றும் ஆய்வக வசதியுடன் பயிற்சி நிலையம் ரூ.121 இலட்சம் மதிப்பீட்டில், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் NABARD நிதியுதவியுடன் ரூ.272 இலட்சம் மதிப்பீட்டில் நிர்வாக அலுவலகம் மற்றும் பால் கொள்முதல் பிரிவு கட்டடம், ரூ.293 இலட்சத்தில் திருவண்ணாமலை பால் பவுடர் ஆலையில் இணைய நிதி மூலம் 1500 மெட்ரிக் டன் பால் பவுடர் சேமிப்பு கிடங்கு மற்றும் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் NABARD நிதியுதவியுடன் ரூ.300 இலட்சம் மதிப்பீட்டில் அலுவலகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்கள் நலன்

பால் உற்பத்தியாளர்களுக்கு தாமதமில்லாமல் பால் பண பட்டுவாடா நேரடியாக அவர்களது வங்கி கணக்கிற்கே செலுத்தப்பட்டு வருகிறது.

2022-23ம் ஆண்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் பணியாளர்களுக்கு ரூ.27.60 இலட்சமும் மற்றும் இணையத்தின் பணியாளர்களுக்கு ரூ. 12.58 இலட்சமும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2023-24ம் ஆண்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் பணியாளர்களுக்கு ரூ.25.85 இலட்சமும் மற்றும் இணையத்தின் பணியாளர்களுக்கு ரூ.11.61 இலட்சமும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது

2022-23 ஆம் ஆண்டில் 1.39 இலட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.1,951.74/- இலட்சம் போனஸ் ஆகவும் ரூ.3432.62 இலட்சம் பங்கு ஈவுத்தொகையாகவும் 5.38.63 இலட்சம் ஆதரவு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

கிராம அளவில் எருமை கன்று வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் எருமை கன்று வளர்ப்பு திட்டத்தின் கீழ் 2000 எருமை கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றிற்கு பருவ ஒருங்கிணைப்பு மற்றும் பாலின விந்து கருவூட்டல் மூலம் 820 இலட்சத்தில் 12 ஒன்றியங்களில் நடைபெற்று வருகிறது.

பால் உற்பத்தியாளர்களின் 5 இலட்சம் கறவை மாடுகளுக்கு 85% மானியத்தில் கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கறவைகளின் சினை பிடிக்கும் திறனை அதிகரிக்க 5000 கறவைகளுக்கு சினைதருண ஒருங்கிணைத்தல் திட்டம் 2022-23 ஆண்டு செயல்படுத்தப்பட்டது.

வாடிக்கையாளர்களிடம் பேராதவைப் பெற்றுள்ள ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகள்

ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு 3 இலட்சம் லிட்டர் அதிகரிப்பு

ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3/- குறைப்பினால் ஆவின் பால் நுகர்வோர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 270 கோடி சேமிப்பு.

தமிழ்நாடு அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசுத் தொகுப்பில் 121 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கோடியே 16 இலட்சம் எண்ணிக்கையில் 100 மி.லி. ஆவின் நெய் விநியோகம்.

மில்க் கேக், மாம்பழம் & ஸ்ட்ராபெரி சுவைகளில் யோகர்ட், பாயாசம் மிக்ஸ், பால்புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒயிட்னர் ஆகிய புதிய பால் பொருட்கள் 19.1.2022 தேதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர்களின் ஐஸ்கிரீம் தேவையினைப் பூர்த்தி செய்யும் பொருட்டு மதுரையில் நாளொன்றுக்கு ஆயிரம் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஐஸ்கிரீம் தொழிற்சாலை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 14.3.2022 அன்று காணொலி வைக்கப்பட்டுள்ளது.

பலாப்பழ ஐஸ்கீரிம், ஒயிட் சாக்லெட், கோல்டு காபி, பட்டர் சிப்லெட்ஸ், பாசுந்தி, ஆவின் ஹெல்த் மிக்ஸ், பதப்படுத்தப்பட்ட சீஸ், பேக்டு யோகர்ட், ஆவின் மில்க் பிஸ்கட் மற்றும் ஆவின் பட்டர் முறுக்கு ஆகிய பத்து புதிய பால் பொருள்கள் 19.8.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2022 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் இனிப்பு வகைகள் 116.00 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனை நிழ்த்தப்பட்டது.

ஆவின் நிறுவனம் சென்னை மாநகரில் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 15.22 இலட்சம் லிட்டர் விற்பனை செய்துள்ளது. மேலும், மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியங்களில் அதிகபட்சமாக 16.37 இலட்சம் லிட்டர் பால் விற்பனை செய்தும்
சாதனை படைத்துள்ளது.

2023-2024 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 31.37 இலட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு பால் விற்பனையை ஒப்பிடும்போது தற்போது 2024 ஆம் ஆண்டு ஏறத்தாழ 23% அதிகரித்துள்ளது.

தமிழ்நாடெங்கும் உள்ள வாடிக்கையாளர்கள் ஆவின் பாலை ஒரே மாதிரியாக வாங்கிப் பயன்படுத்தும் வகையில் புதிய வடிவமைப்பிலான பால் பாக்கெட்டுகள் இணையம் மற்றும் ஒன்றியங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட பேக்கிங் முறையில் பால் பொருள்களைச் சிப்பம் கட்டுதல் மற்றும் அவற்றின் தரத்தினைத் தொடர்ந்து கண்காணிப்பதனால் இனிப்பு வகைகளின் ஆயுட்காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்தே இணையதளம் வாயிலாக ஆவின் பால் அட்டையை விண்ணப்பிக்கவும் மற்றும் புதுப்பிக்கும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டது இந்த எளிய நடை முறை மூலம் சுமார் 58650 பால் அட்டை விண்ணப்பங்கள் கடந்த மூன்று மாதங்களில் புதிப்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் இதர விற்பனை நிலையங்களிலும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனையை துவக்கிடவும் மற்றும் ஐஸ்கிரீம் விற்பனையை உயர்த்திடவும் பிரத்தியோக ஐஸ்கிரீம் மொத்த விற்பனையாளர்கள் நியமித்து விற்பனை துவங்கப்பட்டுள்ளது .இதன் மூலம் ஐஸ்கிரீம் விநியோகத்தை தமிழ்நாடு முழுவதும் எளிதாக கொண்டு சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கோடைக்காலத்தை முன்னிட்டு ஆவின் நிறுவனம் ஐஸ் கிரீம், தயிர், மோர், லஸ்ஸி போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யதுள்ளதுசென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை. வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் ஆவின் ஐஸ் கிரீம் கிடைப்பதை உறுதி செய்ய 33 பேட்டரி வண்டிகள் மூலம் ஐஸ் கிரீம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை தீவு திடலில் நடைபெற்ற 48வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் ஆவின் நிறுவனத்தின் சார்பாக கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு ஆவின் நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி நிலைகள் கண்காட்சி அரங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

வளர்ந்து வரும், மின்னணு மற்றும் இணையவழி வணிகத்தில் ஆவின் நிறுவனம் தனது சந்தை மதிப்பை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. தற்போது ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை மின்வணிக முறையில் பிக் பாஸ்கெட் (BIG BASKET), ஸ்விக்கி (SWIGGY), ஸோமாட்டோ (ZOMATO) ரிலையன்ஸ் (RELIANCE), ஜியோமார்ட் (JIOMART) பிலிங்க்கிட் (BLINKIT) மற்றும் ஸிப்டோ (ZEPTO) மூலம் சந்தைப்படுத்தியுள்ளது. 2023-2024 ஆம் ஆண்டில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மின்னணு மற்றும் இணையவழி வணிகம் மூலம் சுமார் 30.19 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பணியாளர் நலன்

தமிழ்நாட்டு மக்களின் பால் தேவையினைப் பூர்த்தி செய்வதில் முதன்மையாகவும் முன்னணி நிறுவனமாகவும் செயல்படும் ஆவின் நிறுவனத்தில் மாநிலம் முழுவதும் பணியாளர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் தேவைகளை உடனுக்குடன் அறிந்து அவைகள் நிறைவேற்றப்பட்டும் வருகிறது. ஆவின் நிறுவனத்தில் 58 பேருக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

விருதுகள்

இந்திய தேசிய கூட்டுறவு பால் பண்ணைகளின் இணையம்(NCDFI) மூலம் 2021-22 ஆம் ஆண்டு ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருள்களை மின்ணணு வாயிலாக ரூ.590/- கோடிக்கு பரிவர்த்தனை மேற்கொண்டதற்காக ஆவின் நிறுவனத்திற்கு இந்திய அளவில் இரண்டாமிடத்திற்கான விருது வழங்கப்பட்டுப் பாராட்டப்பட்டது.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi