வருசநாடு : ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சியில் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடமலை மயிலாடும்பாறை ஒன்றியம், ஆத்தாங்கரைபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர், ஆத்தாங்கரைப்பட்டி, ராஜேந்திரநகர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ராஜேந்திராநகர் கிராமத்தில் ரூ.5 லட்சம் செலவில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து புதிய போர்வெல் மற்றும் மோட்டார் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது.
இருப்பினும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. மேலும், முறையான சாக்கடை வசதி இல்லாததால் தெருக்களில் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று ஏற்படும் நிலை உள்ளது. மேலும் தெருவிளக்குகளும் முறையாக பயன்பாட்டில் இல்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் 15வது நிதி குழு மாநிலத்தில் புதிய மோட்டார் மற்றும் பைப் லைன் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் முடிவடைந்துள்ளது. தற்போது மோட்டார் பைப் லைனை காணவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஆகையால், ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களின் நலன் கருதி குடிநீர், சாக்கடை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், மக்கள் பயன்பாட்டிற்கு வராத போர்வெல் மற்றும் மின் மோட்டார்களை அதிகாரிகள் ஆய்வு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.