*அரசு பஸ்சை சிறைபிடித்தனர்
ஜோலார்பேட்டை : கழிவுநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளம் 6 மாதங்களாகியும் சீரமைக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சியில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. 6 மாதங்கள் ஆகியும் இதுவரை அந்த கழிவுநீர் கால்வாய் அமைக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று வெலக்கல்நத்தம் பகுதியில் இருந்து செட்டேரி டேம் செல்லும் சாலையில் வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.