ராசிபுரம்: மனநல காப்பகத்தில் 2 நோயாளிகள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் காட்டூர் சாலையில் அணைக்கும் கரங்கள் என்ற பெயரில் மனநல காப்பகம் உள்ளது. இங்கு 70 பேர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று காலை காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த கொடுமுடியைச் சேர்ந்த தங்கராஜ் (58) என்பவருக்கும், தஞ்சாவூரை சேர்ந்த அஸ்வின் (45) என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது.
இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். கட்டையை எடுத்து அஸ்வின் சரமாரி தாக்கியதில் தங்கராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை வார்டன்கள் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து தங்கராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து ராசிபுரம் போலீசார் சென்று அஸ்வினை பிடித்து தனியறையில் வைத்து விசாரித்தனர். விசாரணையில், இந்த மனநல காப்பகத்தில் உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என புகார் எழுந்ததால், காப்பகத்திற்கான அனுமதியை நீட்டிக்காமல், மாவட்ட வருவாய் அலுவலர் நிறுத்தி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.