நெல்லை: நெல்லை மாநகராட்சி 7வது மேயராக திமுகவை ேசர்ந்த கிட்டு என்ற ராமகிருஷ்ணன் பதவியேற்று கொண்டார். கவுன்சிலராக சைக்கிளில் வந்த அவர், மேயராக பொறுப்பேற்ற பின், காரில் புறப்பட்டு சென்றார். நெல்லை மாநகராட்சி புதிய மேயராக 25வது வார்டு திமுக கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இதைதொடர்ந்து புதிய மேயர் பதவியேற்பு விழா, நெல்லை மாநகராட்சி ராஜாஜி மன்ற கூட்டரங்கில் நேற்று காலை நடந்தது.
கிட்டு என்ற ராமகிருஷ்ணனுக்கு மேயராக மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து மேயருக்கான அங்கி, செங்கோலை மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, புதிய மேயருக்கு வழங்கினார். தாய் மரகதம் அம்மாளுடன் இணைந்து செங்கோலை மேயர் பெற்றுக் கொண்டார். எப்போதும் சைக்கிளில் வலம் வரும் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் மேயர் பதவியேற்பு விழாவிற்கும் கவுன்சிலராக வீட்டில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை சைக்கிளிலேயே வந்தார். மேயராக பதவியேற்ற பின், மாநகராட்சி வழங்கிய காரில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.