நன்றி குங்குமம் தோழி
கய்கறிகள் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன, அவை வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்சிஜனேற்றிகள் போன்றவற்றை உள்ளடக்கியவை. காய்கறிகள் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களைத் தடுக்க உதவுகின்றன. தினசரி உணவில் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது உடல்நலத்தை மேம்படுத்துகிறது.
வெள்ளரிக்காய்: கோடை சீசனில் கிடைக்கும் வெள்ளரிக்காய்களை அரைத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஒரு கோப்பை வீதம் காலை – மாலை ஒரு மாதம் பருகி வந்தால் உடல் எடை கட்டுக்குள் வரும். தொடர்ந்து சாப்பிடும் போது, இதிலுள்ள தாதுப் பொருட்கள் உடல் வெப்பத்தைக் குறைத்து, கருவளையம் உள்ள கண்கள் போன்றவற்றிற்கு தீர்வு தரும். இது குளிர்ச்சி பொருள் என்பதால் ஆஸ்துமா போன்ற பிரச்னை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. உணவுக்குப் பின் வெள்ளரிக்காய்களை எடுத்துக்கொள்வதால் குளிர்ச்சியை தந்து வெப்பத்தை தணிக்கும்.
புடலங்காய்: புடலங்காயில் சோடியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இரவு உணவுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து அரைத்து வடிகட்டிய புடலங்காய் ஜூஸில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து அருந்தினால் தூக்கமின்மை நோயைக் கட்டுப்படுத்தும். வெப்பத்தினால் வரும் சூட்டை குறைக்கும். இந்த காய் வயிற்றுப் புண்களையும், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களையும் ஆற்றும். இதிலுள்ள நார்ச்சத்து கெட்ட கொழுப்புகளைக் கரைக்கும் திறன் கொண்டது. இதை நறுக்கி சீரகம், மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து அருந்தி வந்தால் எடை குறையும் வாய்ப்புண்டு.
தொகுப்பு: விஜயலட்சுமி, வேலூர்.