நாடு முழுவதும் அதிவேக சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்ற இந்த காலக்கட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளன. வாகன பெருக்கமும், அதிவேகமும் இதற்கு காரணம் என்றாலும், உரிய நேரத்தில் காயம் அடைந்தவர்களை சிகிச்சையில் சேர்க்காதது இன்னொரு காரணம். அந்த வகையில் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு முன்னுதாரணமாகி இருக்கிறது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 டிசம்பர் 18ம் தேதி தொடங்கி வைத்த ‘நம்மை காக்கும் 48-இன்னுயிர் காப்போம்’ திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேர அவசர சிகிச்சை செலவை அரசே ஏற்கும். முதற்கட்டமாக 609 மருத்துவமனைகளில் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதோடு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனே மருத்துவமனையில் அனுமதிக்கும் நபருக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று இந்த திட்டத்தின் பயன் அப்பட்டமாக தெரிய வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வாகன விபத்துகளில் தமிழ்நாடு தான் முதலிடம் பிடிக்கும். அப்படியே விபத்தில் உயிர்பலி எண்ணிக்கையிலும் முதல் இடம் தமிழ்நாடு தான். ஆனால் ‘நம்மை காக்கும் 48 – இன்னுயிர் காப்போம்’ திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, 2022ம் ஆண்டு வாகன விபத்து பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தாலும், விபத்தால் உயிர்பலி எண்ணிக்கையில் 2ம் இடம் பிடித்து உள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் முத்தான திட்டத்தால் தமிழ்நாட்டில் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது தேசிய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
2022ல் நாடு முழுவதும் 4,61,312 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,55,781 விபத்துகளில் உயிர்பலி ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துகளில் 1,68,491 பேர் உயிர் இழந்துள்ளனர். 4,43,366 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 2022ம் ஆண்டிலும் விபத்து எண்ணிக்கையில் முதல் இடம் பிடித்துள்ளது. 18,972 விபத்துகள் நடந்துள்ளன. கேரளா 17,627 விபத்துகளுடன் 2ம் இடத்தையும், உபி 14,990 விபத்துகளுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆனால் உயிர்பலியில் உபி முதல் இடம் பிடித்துள்ளது. அங்கு 8,479 பேர் கடந்த ஆண்டு விபத்தில் பலியாகி உள்ளனர். 5978 உயிர்பலியுடன் தமிழ்நாடு 2ம் இடத்தையும், 4923 உயிர்பலியுடன் மகாராஷ்டிரா 3வது இடத்தையும் பிடித்து உள்ளன. நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களில் 76,752 விபத்துகள் நடந்துள்ளன. 2021ம் ஆண்டு முதல் இடத்தில் இருந்த சென்னை இந்த முறை 5வது இடத்திற்கு சென்றுள்ளது. அதேபோல் விபத்து உயிர் பலியில் 2வது இடத்தில் இருந்த சென்னை இந்த முறை 10வது இடத்திற்கும், அதிக காயம் அடைந்த பெருநகரங்களில் முதல் இடத்தில் இருந்த சென்னை 4வது இடத்திற்கும் சென்றுள்ளது என்றால் நிச்சயம் இன்னுயிர் காப்போம் திட்டம் தான் காரணம். தமிழ்நாட்டு மக்களின் உயிர் காக்கும் திட்டமாக மாறி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டம் இந்தியாவின் முன்மாதிரி திட்டமாகவும் மாறி இருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம். இதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்திறனின் முத்திரை.