இம்பால்: மணிப்பூரில் கைது செய்யப்பட்ட அரம்பை தெங்கோல் தலைவர் உள்ளிட்டோரை விடுவிக்கக்கோரி போராட்டங்கள் தொடர்கின்றன. இதில் 2 போலீசார் காயமைடைந்துள்ளனர். மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மெய்டீஸ் மற்றும் குக்கி இனத்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அமைதியற்ற சூழல் நிலவி வருகின்றது. பாஜவின் பைரன் சிங் தலைமையிலான அரசு ராஜினாமா செய்ததை தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகும் நிலைமை சீரடையவில்லை. இந்நிலையில், வன்முறை தொடர்பாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறி கடந்த சனிக்கிழமை மெய்டீஸ் அமைப்பின் அரம்பை தெங்கோல் தலைவர் கனன் சிங் மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
இம்பால் பள்ளத்தாக்கின் பல்வேறு மாவட்டங்களில் தடை உத்தரவுகளை மீறி போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. பல இடங்களில் பாதுகாப்பு படையினருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மோதலில் ஈடுபட்டனர். குராய் லாம் லாங் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினார்கள். மேலும் ரப்பர் குண்டுகள் மூலமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நம்போலில் பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பில் இரண்டு போலீசார் காயமடைந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.