இம்பால்: மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையுடனான மோதலில் போராட்டக்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. மணிப்பூர் மாநிலம் கடந்த ஒன்றரை ஆண்டாக இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் ஜிரிபாம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாமில் இருந்து மெய்தி இனத்தை சேர்ந்த 3 பெண்கள், 3 குழந்தைகள் கடந்த 11ம் தேதி மாயமாகினர். பாதுகாப்பு படையுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 10 குக்கி இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த 6 பேரும் மாயமானதால் பதற்றம் உருவானது. அடுத்த ஓரிரு நாளில் மாயமான 6 பேரில் இரண்டரை வயது குழந்தை, 10 மாத குழந்தை உட்பட 5 பேரின் சடலங்கள் ஆற்றில் மிதந்தது கண்டறியப்பட்டது. இவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டு ஆற்றில் சடலங்கள் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மணிப்பூரில் கடந்த சனிக்கிழமை மீண்டும் வன்முறை வெடித்தது. இம்பால் சமவெளிப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு தீ வைத்து எரித்தனர். பல பொதுமக்களின் வாகனங்களும் எரிக்கப்பட்டன. முதல்வர் பிரேன் சிங்கின் வீடு மீதும் கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இதனால், இம்பாலில் காலவரையற்ற ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 6 பேர் கடத்தி கொல்லப்பட்டதை கண்டித்து, ஜிரிபாம் மாவட்டத்தின் பாபுபாரா பகுதியில், நேற்று முன்தினம் இரவு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், அங்கிருந்த பாஜ, காங்கிரஸ் அலுவலகம் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்கள், ஆவணங்களை ரோட்டில் எடுத்து வந்து எரித்தனர். போராட்டக்காரர்களை விரட்ட போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் போராட்டக்காரர்களில் ஒருவர் பலியானார். அவர் 20 வயது அதோபா என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் யார் துப்பாக்கியால் சுட்டது என்பது தெரியவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினரிடம் இருந்து துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டதாக போராட்டகாரர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதற்கிடையே, ஜிரிபாம் அருகே அடையாளம் தெரியாத ஒரு நபரின் சடலம் கைப்பற்றுள்ளது. அவர் யார், எப்படி இறந்தார் என்பதும் தெரியவில்லை. சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இதன் காரணமாக ஜிரிபாமில் கடும் பதற்றம் நிலவுகிறது.
இதே போல, இம்பால் சமவெளிப் பகுதியில் பதற்றம் நீடிப்பதால் நேற்று மார்க்கெட், தொழில் நிறுவனங்கள், மருந்து கடைகள் அனைத்தும் மூடியே இருந்தன. பொது போக்குவரத்து முழுமையாக முடங்கிய நிலையில், சில தனியார் வாகனங்கள் மட்டும் சாலையில் சென்றன. அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, அசம்பாவிதங்களை தவிர்க்க தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமைச்சர், எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு செல்லும் சாலைகள், தலைமைச் செயலகம், பாஜ தலைமை அலுவலகம் செல்லும் சாலைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து நேற்று முன்தினம் மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்து விட்டு டெல்லி விரைந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து நேற்று 2வது நாளாக அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை அமைச்சக செயலாளர் கோவிந்த் மோகன், உளவுத்துறை இயக்குநர் தபன் தேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மணிப்பூரில் மலைப்பகுதியை சேர்ந்த குக்கி மற்றும் இம்பால் சமவெளியை சேர்ந்த மெய்தி இனத்தவர்கள் இடையேயான இனக்கலவரத்தில் இதுவரை 220 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.