சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தெய்வச்செயல் என்பவர் கல்லூரி மாணவியை ஏமாற்றி சிலருக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் அரக்கோணம் தொகுதி எம்எல்ஏ ரவியிடம் மாணவி முறையிட்ட பிறகே எப்ஐஆர் பதிந்துள்ளது. மேலும், தன்னைப் போன்றே ‘20 வயதுள்ள 20 பெண்கள்’ தெய்வச்செயலின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், “அதிமுக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் 21ம் தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.