‘‘பொதுத் தேர்தல் நெருங்குவதால் புதுச்சேரியிலும் மற்ற அணிகளை உடைக்க தாமரை வியூகம் வகுத்துள்ளதாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘புல்லட்சாமி அரசாங்கம் நடக்கும் புதுச்சேரியிலும் பொதுத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுகள் இப்போதே தொடங்கி விட்டதாம்.. தாமரை கட்சியோ ஜக்கை பிரியாமல் போட்டியிட விரும்புகிறதாம்.. ஆனால் நடிகரை நம்பியுள்ள புல்லட்சாமியோ நெருக்கடிகளை சந்தித்தும் பிடிகொடுக்காமல் உள்ளாராம்.. இது ஒருபுறமிருக்க, எதிர்அணியை உடைக்க ரகசியமாக காய்களை நகர்த்துகிறதாம் தாமரை.. குறிப்பாக, முக்கிய கூட்டணி கட்சியிலிருந்து கையை அகற்றி விட்டால் ஓட்டுகள் சிதறி எளிதில் வெற்றி பெறலாம் என நினைக்கிறதாம்.. இதற்காக, முக்கிய கட்சிக்கு நேர்மாறான சில சுயேச்சைகளை கையில் ஐக்கியப்படுத்தும் வேலைகளை திரைமறைவில் மேற்கொண்டுள்ளதாம்.. இந்த முயற்சி இரு கட்சிகளின் மாநில தலைமைக்கு கசியவே உஷாராகி விட்டார்களாம்.. யார் எந்த கட்சிக்கு சென்றாலும் தாமரையால் இந்தியா அணிக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்களாம்.. மற்ற மாநிலத்தில் தாமரை ஆடிய விளையாட்டுகள் தமிழ்மக்களிடம் பலிக்காது என்று இருகட்சி தொண்டர்களும் மார்தட்டுகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் விடைபெற்றதால் சர்ச்சைக்கு பெயர்போன வி.சி. பிரிவுபசார விழாவை ரத்து பண்ணிட்டு பின்புறமா போன கதை தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்ட யுனிவர்சிட்டியில சர்ச்சைக்கு பெயர்போன விசி, வயது மூப்பு காரணமாக நேற்றுடன் ரிலீவ் ஆனாரு.. கமிஷன் புகார், விஜிலென்ஸ் வழக்கு என, பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில விடைபெற்றதால யுனிவர்சிட்டியே ஒருவாரமா பெரும் பரபரப்பா இருந்தது.. தனக்கு ரொம்ப விஸ்வாசமா இருந்ததால ஒரு வருசம் பதவி நீட்டிப்பு கொடுத்த கிண்டிக்காரரு, அவரோட மாளிகையிலேயே பிரிவு உபசாரம் கொடுத்தது சர்ச்சையானது.. அதேசமயம், யுனிவர்சிட்டில விசிக்கு பிரிவு உபசாரம் கொடுத்து அனுப்பி வைக்கிறதுல பெரிய பஞ்சாயத்தே நடந்ததாம்… இது சம்பந்தமா அங்குள்ள 2 வாத்தியார் சங்கங்களும் ஒண்ணு சேராம பிடிவாதமா இருந்தாங்களாம்.. இதனால ஷாக்கான விசியோட ஆதரவாளர்கள் சிலர் மட்டும், ஸ்டார் ஓட்டல்ல ரகசியமா பிரிவு உபசார நிகழ்ச்சிய நடத்தி விசிய உற்சாகப்படுத்திருக்காங்க.. அதேசமயம் கடைசி நாளான நேற்று நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து, பரிசுப்பொருள் கொடுத்து அனுப்ப ஏற்பாடு நடந்திருக்கு.. ஆனா தொழிலாளர் சங்கத்தினர் விசிய கண்டிச்சு திடீர் போராட்டம் நடத்திட்டாங்க.. இதனால அதிர்ச்சியடைந்த விசி, பிரிவு உபசாரம் பங்சன் எல்லாத்தையும் ரத்து பண்ண சொல்லிட்டு, பக்கத்துல இருக்குற இன்ஜினியரிங் கல்லூரி வழியா புறப்பட்டு வீட்டுக்கு போயிட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சம்திங் வேட்டையால திரும்பிய பக்கமெல்லாம் ஆக்கிரமிப்புகள் அதிகரிச்சிக்கிட்டே போகுதாமே எங்கே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாநகரத்துல திரும்பிய பக்கமெல்லாம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிமாகிடுச்சு.. அதிகாரிகளும் அப்பப்போ ஆக்கிரமிப்புகளை எடுக்குறாங்க.. அதேபோல ஆக்கிரமிப்புகாரங்களும் திரும்பவும் அதே இடத்துல ஆக்கிரமிச்சு கடைய வெச்சிடுறாங்களாம்.. இதுல குறிப்பாக சொல்லணும்னா, வேலூர் அண்ணா சாலை, ஆரணி சாலை, வேலூர்- ஆற்காடு சாலை, மண்டி வீதி, காட்டுப்பாடி சாலை, விருதம்பட்டு, காட்பாடி காவல் நிலையம் எதிர்ல, வள்ளிமலை கூட்டு ரோடுன்னு ஆக்கிரமிப்புகள் தாராளமாக இருந்து வருது.. இந்த ஆக்கிரமிப்புகள் எல்லாத்துக்கும் குறிப்பிட்ட சில டிபார்ட்மெண்ட்டுகளுக்கு சம்திங் போகுதாம்.. இந்த சம்திங் வேட்டையினால, ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டே போகுதாம்.. இதை தடுக்க வேண்டிய அதிகாரிகளோ, அந்த பக்கம் டிராபிக் அதிகமாக இருக்கும், இப்படி போய்டலாம்னு ரூட்ட மாத்தி போய்கிட்டே இருக்குறாங்களாம்.. இதனால சம்திங் வாங்கிட்டு பச்சை கொடி காட்டுறவங்க காட்டிக்கிட்டே இருக்குறாங்களாம்.. விபத்துல சிக்குற ஜனங்க, விபத்துல சிக்கிக்கிட்டேத்தான் இருக்குறாங்க.. மாநகரத்துல இப்படி திரும்புற திசையெல்லாம் ஆக்கிரமிப்பா இருக்குறதுக்கு முற்றுப்புள்ளி யார் தான் வைப்பாங்கன்னு ஜனங்க கேள்வி எழுப்புறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஈடி, ஐடி அதிகாரிங்க எப்ப கதவை தட்டுவாங்களோ என பீதியில் உறைந்து கிடக்கிறாராமே இலைக்கட்சி நிர்வாகி ஒருத்தர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மெடல் மாவட்டத்தின் பட்டாசு நகரத்து இலைக்கட்சியின் ஒன்றிய நிர்வாகியாக இருப்பவர் ஆறெழுத்துக்காரர்.. பட்டாசு ஆலை அதிபரின் மூலம் இலைக்கட்சியில் ஐக்கியமாகி, நகர்த்த வேண்டியதை நகர்த்தியதும், ஒன்றிய பதவி இவரின் வீடு தேடி வந்தது.. பதவி கிடைத்ததில் இருந்து இவரின் வளர்ச்சியும், சொத்து மதிப்பும் திகுடுமுகுடாக ஏறிக் கொண்டே போவதைக் கண்டு உள்ளூர் மக்கள் மிரண்டுபோய் இருக்காங்களாம்.. பெரிய அளவில் எந்த ஒரு தொழிலும் இன்றி கோடிகளில் புரளும் இவரின் வளர்ச்சி கண்டு இலைக்கட்சியினரே அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தில் மூக்கின் மேல் விரல் வைச்சிருக்காங்களாம்.. மெடல் மாவட்டத்தில் பதவியில் இருக்கும் பகுதியில் மட்டுமல்லாது, ‘குடி’, ‘தூர்’ என முடியும் ஊர்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பல கோடி ரூபாய் மதிப்பில் உறவினர்கள் பெயர்களில் சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டிருக்கிறதாம்.. தண்ணியாக இறைப்பதால், வசதியில் பெருகியுள்ள இந்த ஒற்றை ஆளுக்காக ஒட்டு மொத்த இலைக்கட்சி நிர்வாகிகளையுமே மேலிடம் பகைத்து வருகிறதாம்.. இந்த ஆறெழுத்துக்காரர் சமீப காலங்களில் வாங்கி குவித்த சொத்து மதிப்பை ஐடி, ஈடி துறைகள் ஆய்வு செய்தால் போதும்.. திண்ணை காலியாகி விடும் என்று அவரைச் சுற்றியவர்களே இப்போது ஐடி, ஈடி துறை அதிகாரிகளுக்கும் தொடர்ந்து மனுக்களை தட்டி விட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.. இதனை அறிந்த நாள் முதல் ஆறெழுத்துக்காரர் ஈடி அதிகாரிகள் எப்போ கதவை தட்டுவார்களோ என பீதியடைந்து, இலை மேலிடத்திடம் தஞ்சம் அடைய முயற்சிகளை தொடங்கியிருக்கிறாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
திடீர் போராட்டத்தால் ‘சர்ச்சை வி.சி.’ பிரிவுபசார விழாவை ரத்து செய்துவிட்டு ஓடியதுபற்றி சொல்கிறார்: wiki யானந்தா
0
previous post