சென்னை: தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிப்பதும், மாநில முன்னுரிமையை பாதிப்பதுமான அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்தல், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டம் நடந்தது.
காலை 9 மணியில் இருந்தே டிட்டோஜாக் அமைப்பின் 13 மாவட்ட தலைவர்கள் தலைமையில் ஆசிரியர்கள் அணிஅணியாக டிபிஐ வளாகத்துக்கு வந்து கோஷமிட்டனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்று திருமண மண்டபம், சமுதாயக் கூடங்களில் தங்க வைத்தனர். சுமார் 2000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.