சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்திரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் மற்றும் அதன் அருகே உள்ள சமூகநலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கோரிக்கைகள் தொடர்பாக 3 நபர் குழு அறிக்கை அளித்ததும் நடவடிக்கை எடுப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். “கடந்த 9 நாட்களாக பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
அவர்களை கைதுசெய்ததையும், ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.