ஆலந்தூர்: புழுதிவாக்கம் ஜெயா நகரை சேர்ந்தவர் சுமலதா. இவரது மகள் புவனேஸ்வரி (27). ஐடி நிறுவனத்தில் வேலை செய்த இவர், மேற்படிப்புக்காக கடந்த 20 நாட்களுக்கு முன் வேலையில் இருந்து நின்று விட்டார். பின்னர், மேற்படிப்புக்கு தனது தாயிடம் பணம் கேட்டு தொல்லை செய்துள்ளார். அதற்கு அவர், கூலி வேலை செய்யும் என்னால் பணம் கொடுக்க முடியாது, செய்த வேலையையும் விட்டு விட்டாயே என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுமலதா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி, அங்கு வந்து புவனேஸ்வரியை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்த மடிப்பாக்கம் காவல் நிலைய எஸ்ஐ ராமலிங்கம், புவனேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பிரேத பரிசோதனைக்கு பின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட புவனேஸ்வரி உடல் சடங்குகளுக்கு பின் ஜெயா நகர் வழியாக மயான பூமிக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தபோது, அங்கிருந்த சிலர் சடலத்தை ஜெயாநகர் வழியாக எடுத்துச் சொல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த மடிப்பாக்கம் போலீசார், எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் பேச்சுவார்தை நடத்தி சடலத்தை எடுத்து செல்ல அனுமதித்தனர். இதையடுத்து, சடலத்தை மயானம் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது