திருப்பூர்: ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி தேர்வு இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த முதல் நிலை தேர்வின் வினாத்தாளில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார்? என்ற கேள்விக்கான நான்கு விடைகளில் ஒன்றாக பெரியாரின் பெயர் சாதிப் பெயருடன் குறிப்பிடப்பட்டிருந்தது. வாழ்நாள் முழுவதும் சாதியை எதிர்த்து குரல் கொடுத்து வந்தவரின் பெயருக்கு பின்னால் சாதியை அடைமொழியைக் குறிப்பிடுவதா? என கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் திருப்பூரில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு முன்பாக நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு தபெதிக மாவட்ட தலைவர் சன்.முத்துக்குமார் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து யுபிஎஸ்சி வினாத்தாளை தீயிட்டு எரித்தனர். இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, புரட்சிகர இளைஞர் முன்னணி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.