பாலக்காடு : ஆர்.ஜெ.டி அமைப்பு பாலக்காடு மாவட்ட கமிட்டி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தபால் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்தை கட்சி தலைவர் சுப்ரமணியன் தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவார்ண நிதியுதவி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து தர்ணா போராட்டம் ஆர்.ஜெ.டி கட்சி சார்பில் நடைபெறுகிறது.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் 500-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாயின. ஏராளமானோரின் வீடுகள் சேதமடைந்தன. மேலும், தாய், தந்தையை இழந்தோர், மாணவர்கள், பிள்ளைகள், முதியோர்கள், ஆதரவின்றி பரிதவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு உரிய நிவார்ண நிதிகள் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் என குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து இப்போக்கை கண்டித்து தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் பஷீர், சுலைமான், நாராயணன், செல்வன், காதிது, சிராஜ், தாசன், கமருதீன், சிவராஜன், சுந்தரன், சுரேந்திரன், குஞ்சு, பாபு மொய்தீன் குட்டி, பிரகாசன், முஸ்தப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஆர்.ஜெ.டி அமைப்பு உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.