நத்தம் : நத்தம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி முல்லை நகரை சேர்ந்தவர் பொன்னம்மாள் (60). இவர் வீட்டுக்கு செல்லும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பாதையில் சின்னு, அவையன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
பொன்னம்மாள் தனது வீட்டிற்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.
நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்று நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் பாலகிருஷ்ணன், தலைமை நில அளவையர் தமிழ்செல்வன், விஏஓ மலையாண்டி, எஸ்ஐ கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார், அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற ெபாக்லைன் இயந்திரத்துடன் வந்தனர்.
தாசில்தார் வருகைக்காக அதிகாரிகள் காத்திருந்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறும் சூழ்நிலை உருவானது. இதற்கிடையே அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற துவங்கினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னு, அவையன் குடும்பத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் பொக்லைன் முன் படுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சின்னு மருமகள் முருகேஸ்வரி தனது 2 வயது கைக்குழந்தையுடன் திடீரென வேலியில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார்.
போலீசார் அவரை அப்புறப்படுத்தினர். வீட்டுக்குள் சென்ற அவர் ஸ்டவ் அடுப்பை எடுத்து வந்து தீக்குளிப்பதற்காக அதிலிருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்ற முயற்சித்தார்.
உடனே போலீசார் அவரிடமிருந்து ஸ்டவ் அடுப்பை வாங்கி கொண்டனர்.
தொடர் எதிர்ப்பால் நீண்ட நேரத்திற்கு பின் சிறிதளவு பாதையை ஏற்படுத்தி கொடுத்து விட்டு ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றாமல் அதிகாரிகள் பாதியிலேயே திரும்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சில மணிநேரம் பரபரப்பு நிலவியது.